கழுகுகள் பாதுகாப்புக்கான மாநில குழுவில் வன நிபுணர்கள் சேர்ப்பு: அரசு தகவல்
கழுகுகள் பாதுகாப்புக்கான மாநில குழுவில் வன நிபுணர்கள் சேர்ப்பு: அரசு தகவல்
ADDED : மார் 30, 2025 01:49 AM

சென்னை: ''பிணந்தின்னி கழுகுகள் இனத்தைப் பாதுகாக்க அமைக்கப்பட்ட மாநிலக் குழுவில், வன நிபுணர்கள் சேர்க்கப்பட்டு உள்ளனர்' என, சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக வனத் துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் பிணந்தின்னி கழுகுகள் அழிந்து வருவதைத் தடுக்க, கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில், கழுகுகள் வாழ்விட மேம்பாடு பகுதிகளை உருவாக்கக் கோரி, சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் சூரியகுமார் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
மருத்துவ சிகிச்சை
இந்த வழக்கு, தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், நீதிபதி முகமது சபீக் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழக வனத்துறை தலைமை வன பாதுகாப்பாளர் சீனிவாச ராமச்சந்திரன் சார்பில், கூடுதல் அட்வ கேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன் அறிக்கை தாக்கல் செய்தார்.
அதன் விபரம்:
விலங்குகள் மீட்பு மற்றும் மறுவாழ்வு மையம், கோவை மாவட்டம் சிறுமலை அருகே பெத்திக்குட்டை என்ற இடத்தில் கட்டப்பட்டு வருகிறது.
இங்கு காயமடைந்த யானைகள், சிறுத்தைகள், புலிகள், பறவைகள், ஊர்வன உள்ளிட்ட வன விலங்குகளுக்கு அறுவை சிகிச்சை, நோய் கண்டறிதல் உள்ளிட்ட சிறப்பு மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும்.
காயமடைந்த பிணந்தின்னி கழுகுகளுக்கும் உரிய சிகிச்சை அளிக்கப்படும். கழுகுகள் எண்ணிக்கை, இனம், வாழ்விடம் குறித்து, தமிழக வனத்துறை புள்ளிவிபரங்களை சேகரித்துள்ளது.
கழுகுகள் பாதுகாப்புக்காக, மாநில அளவில் ஆலோசனைக் குழு, 2022ல் அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு, கடந்தாண்டு மே மாதம் மாற்றியமைக்கப்பட்டது.
தலைவர், உறுப்பினர் செயலர் மற்றும் ஒன்பது உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
விழிப்புணர்வு
குழுவில் கழுகுகளின் பாதுகாப்புக்காக, ஊட்டி அரசு கலை கல்லுாரி உதவி பேராசிரியர் பி.ராமகிருஷ்ணன், டேராடூன் வனவிலங்கு விஞ்ஞானி டாக்டர் கே.ரமேஷ், கோவை சுற்றுச்சூழல் மற்றும் விஷத்தடுப்பு துறை இயக்குநர் டாக்டர் எஸ்.முரளிதரன், ஹரியானாவில் உள்ள பாம்பே இயற்கை வரலாறு சங்கத்தின் உதவி இயக்குநர் டாக்டர் வைபு பிரகாஷ் இடம் பெற்றுள்ளனர்.
மருந்து விற்பனை கடை உரிமையாளர்களை, கழுகுகள் பாதுகாப்பு பகுதிகளுக்கு அழைத்துச் சென்று, கழுகுகளுக்கான உணவு குறித்து விழிப்புணர்வு தரப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையை ஏற்ற நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.