வனப்பகுதியில் வைக்கப்படும் தீ; பல ஏக்கரில் மரங்கள் எரிந்து நாசம்
வனப்பகுதியில் வைக்கப்படும் தீ; பல ஏக்கரில் மரங்கள் எரிந்து நாசம்
ADDED : மார் 04, 2024 04:55 AM

போடி : தேனிமாவட்டம் போடி வனப்பகுதியில் தீ வைக்கப்படும் சம்பவங்கள் தொடர்கிறது. இதனால் பல ஏக்கரில் மரங்கள் எரிந்து நாசமாகிறது.
போடி அருகே போடி மெட்டு, கழுகுமலை பீட் மங்களக் கோம்பை, மதிகெட்டான் சோலை, புலியூத்து, அத்தியூத்து உட்பட பல்வேறு பகுதிகளில் 75 ஆயிரம் ஏக்கருக்கு மேல் வனப்பகுதி அமைந்துள்ளது.
கஞ்சா பயிரிடப்படுபவர்கள், கால்நடை மேய்ப்பவர்கள், கரிமூட்டம் போடுவோர் பாதை உள்ளிட்டவற்றுக்காக தீ வைத்து வருகின்றனர். நான்கு நாட்களுக்கு முன் கழுகுமலை பீட் மங்களக் கோம்பை வனப்பகுதியில் வைக்கப்பட்டு பரவிய காட்டு தீயால் பல ஏக்கர் மரங்கள், மூலிகை செடிகள் எரிந்து சேதமாகின.
அதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் இரவு போடி வடக்குமலை அருகே ஊத்தாம்பாறை வனப்பகுதியில் மர்மநபர்களால் தீ வைக்கப்பட்டதால் பல ஏக்கரில் மரங்கள் எரிந்து சேதமாகின. இதனால் வன உயிரினங்கள் பலியாவதோடு, வனவிலங்குகள் இடம் பெயரும் நிலை ஏற்பட்டு வருகிறது. இதை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

