தோடர் பழங்குடியினரின் நிலத்தை வனத்துறை ஆக்கிரமித்துள்ளது :நீலகிரி மாவட்ட பழங்குடியினர் அதிருப்தி
தோடர் பழங்குடியினரின் நிலத்தை வனத்துறை ஆக்கிரமித்துள்ளது :நீலகிரி மாவட்ட பழங்குடியினர் அதிருப்தி
ADDED : ஆக 29, 2011 12:51 AM
சென்னை : நீலகிரி மாவட்டத்தில் தோடர் பழங்குடியினரின் பட்டா நிலத்தை, வனத்துறை ஆக்கிரமித்து மரம் வளர்ப்பதால், தங்களுக்கு எந்த வருவாயும் இன்றி தவிப்பதாக தோடர் பழங்குடியினர் குமுறுகின்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் தோடர் பழங்குடியினருக்கு, 1881ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் மலையோரப் பகுதிகளில் 2,900 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டுள்ளது. சுதந்திரம் கிடைத்த பிறகு, பழங்குடியினரை யாரும் ஏமாற்றி விடக்கூடாது என்பதற்காக, இந்நிலம் அரசின் மூலம் வனத்துறையின் சட்டப்பிரிவு 33ன் கீழ், அரசின் மேலாண்மையில் கொண்டு வரப்பட்டது. இந்நிலங்களை தோடர் பழங்குடியினர் தவிர யாரும் அனுபவிக்கவோ, பயிர் செய்யவோ முடியாது. மீறுபவர்களுக்கு அபராதத்துடன், ஆறு மாதம் சிறைத் தண்டனையும் அனுபவிக்க வேண்டும்.
இந்நிலத்தை தோடர் பழங்குடியினர் ஆடு, மாடுகளின் மேய்ச்சல் நிலமாக பயன்படுத்திக் கொள்ளவும், மாவட்ட கலெக்டரின் அனுமதி பெற்று விவசாயம் செய்யவும் அனுமதிக்கப்பட்டிருந்தது. கடந்த 1983ம் ஆண்டு வரை இது நடைமுறையில் இருந்துள்ளது. இதன் பிறகு, நீலகிரி மாவட்டம் ஊட்டி தாலுகாவில் உள்ள நஞ்சங்காடு, சோலூர் மற்றும் நடுவட்டம் கிராமங்களில் உள்ள 500 ஏக்கர், தோடர் பழங்குடியினரின் பட்டா நிலத்தை, வனத்துறை ஆக்கிரமிப்பு செய்து, யூகலிப்டஸ், கற்பூரம், சீகை மரங்களை வளர்த்துள்ளது. இம்மரங்களை வனத்துறையினர் வெட்டும்போது தோடர் பழங்குடியினர் தடுத்ததால், மரங்கள் வெட்டப்படாமல் தடுக்கப்பட்டுள்ளன.
இது குறித்து தோடர் பழங்குடியினரின் நலனுக்காக போராடி வரும், தமிழக பண்டைய பழங்குடியினர் சங்கத்தின் பொதுச் செயலர் ஆல்வாஸ் குட்டன் கூறியதாவது: தோடர் பழங்குடியினரின் 500 ஏக்கர் பட்டா நிலத்தை, வனத்துறை ஆக்கிரமித்து மரங்கள் வளர்ப்பது நிறுத்தப்பட வேண்டும்; வனத்துறையினர் இந்நிலங்களிலிருந்து வெளியேற வேண்டும் என்றும் தொடர்ந்து கோரிக்கை விடுத்தும், அரசு கண்டுகொள்ளாமல் காலம் தாழ்த்தி வருகிறது. இதனால், இந்நிலங்களில் பல வருடங்களாக மரங்கள் வெட்டப்படாமலேயே உள்ளன.
இந்நிலங்களில் பல ஆண்டுகளாக வெட்டப்படாமல் உள்ள மரங்களை வெட்டி விற்பதன் மூலம் கிடைக்கும் பணத்தில், மரங்களை வளர்த்ததற்கான செலவிற்காக 10 சதவீதம் தொகையை எடுத்துக் கொண்டு, மீதத் தொகையை தோடர் பழங்குடியினருக்கு வனத்துறை வழங்க வேண்டும். இல்லையென்றால், தோடர் பழங்குடியினர் மூலம் 10 சதவீதத் தொகையை வனத்துறை வசூலித்துக் கொண்டு, மரங்களை வெட்டிக் கொள்ள அரசு எங்களுக்கு அனுமதிக்க வேண்டும்.
பழங்குடியினர் முன்னேற வேண்டுமென்பதற்காக மத்திய, மாநில அரசுகள் புதுப் புது திட்டங்கள் தீட்டி, 100 சதவீதம் மானியம் வழங்கி வரும் நிலையில், பழங்குடியினரின் பட்டா நிலத்தில் உள்ள மரங்களை, வனத்துறை விற்று எடுத்துக்கொள்வது நியாயமல்ல. தமிழக அரசு இனியும் தாமதிக்காமல், இந்நிலத்தை தோடர் பழங்குடியினரின் பயன்பாட்டிற்கே வழங்க வேண்டும். இவ்வாறு ஆல்வாஸ் குட்டன் கூறினார்.