முதல்வர் ஸ்டாலினுடன் காடுவெட்டி குரு மகள் சந்திப்பு
முதல்வர் ஸ்டாலினுடன் காடுவெட்டி குரு மகள் சந்திப்பு
ADDED : பிப் 05, 2025 07:11 PM
சென்னை:வன்னியர் சமூகப் பிரமுகர்கள், முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசினர்.
மறைந்த காடுவெட்டி குருவின் மகள் விருதாம்பிகை, வன்னியர் கூட்டமைப்பின் தலைவர் சி.என்.ராமமூர்த்தி, தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் ஆகியோர், முதல்வர் ஸ்டாலினை, அண்ணா அறிவாலயத்தில் தனித்தனியே சந்தித்து பேசினர். பா.ம.க., தலைமை தி.மு.க.,வை கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர்களை, முதல்வர் சந்தித்து பேசியது, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சந்திப்பு குறித்து, வேல்முருகன் கூறுகையில், 'ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். கடலுார் முதுநகரில் தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி சங்கர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் போலீஸ் துறையினரின் நடவடிக்கை திருப்திகரமாக இல்லை' என, முதல்வரிடம் தெரிவித்தேன் என்றார்.
விருதாம்பிகை கூறுகையில், ''வன்னியர் கல்வி அறக்கட்டளையை, ராமதாஸ் அறக்கட்டளையாக மாற்றி வைத்துள்ளார். அதை மீட்க வேண்டும் என வலியுறுத்தியதோடு, காடுவெட்டி குருவுக்கு வெண்கல சிலை அமைக்க, அரசு அனுமதி அளித்ததற்கும், இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிர் நீத்த, 21 தியாகிகளுக்கு மணிமண்டபம் கட்டி திறந்ததற்கும், முதல்வருக்கு நன்றி தெரிவித்தோம்,'' என்றார்.