ADDED : ஆக 07, 2025 02:00 AM

சென்னை: புதுக்கோட்டை மன்னர் குடும்பத்தைச் சேர்ந்தவரும், முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான கார்த்திக் தொண்டைமான், அ.தி.மு.க.,வில் இருந்து விலகி, முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் நேற்று தி.மு.க.,வில் இணைந்தார்.
புதுக்கோட்டை தொண்டைமான் அரச பரம்பரையைச் சேர்ந்த கார்த்திக் தொண்டைமான், 2012ல் புதுக்கோட்டை இடைத்தேர்தலில், அ.தி.மு.க., சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ., ஆனார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த பின், பன்னீர்செல்வம் அணியில் இருந்த அவர், பின்னர் பழனிசாமி அணிக்கு வந்தார்.
கடந்த 2021 சட்டசபை தேர்தலில், புதுக்கோட்டை தொகுதியில் அ.தி.மு.க., சார்பில் போட்டியிட்டு தோற்றார். தற்போது, முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.,வில் இணைந்துள்ளார்.
தி.மு.க.,வில் சேர்ந்த கார்த்திக் தொண்டைமான் கூறுகையில், ''மதவாத சக்திகளுக்கு, அ.தி.மு.க., துணை போவது எனக்கு பிடிக்கவில்லை. அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியின் செயல்பாடுகள் சரியில்லை. அதனால் தான் தி.மு.க.,வில் இணைந்தேன்,'' என்றார்.