மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை குழுமத்தின் முன்னாள் தலைவர் நம்பெருமாள் சாமி காலமானார்
மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை குழுமத்தின் முன்னாள் தலைவர் நம்பெருமாள் சாமி காலமானார்
ADDED : ஜூலை 24, 2025 11:20 AM

மதுரை: மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை குழுமத்தின் முன்னாள் தலைவர் நம்பெருமாள் சாமி இன்று காலமானார். அவரது மறைவுக்கு பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மதுரை அண்ணாநகரில் உள்ள அவர் வீட்டில் இன்று மாலை 4 மணி முதல் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது. அவரது சொந்த கிராமமான தேனி மாவட்டம், அம்பாசமுத்திரத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) உடல் தகனம் செய்யப்பட இருக்கிறது.
யார் இந்த நம்பெருமாள் சாமி?
மதுரையில் அரவிந்த் கண் மருத்துவமனையின் நிறுவனர்களில் ஒருவர் டாக்டர் நம்பெருமாள் சாமி. கண் மருத்துவப் பேராசிரியரான இவர், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தனது மருத்துவ வாழ்க்கையைத் தொடங்கினார். 1967ம் ஆண்டு இந்தியாவின் குறைந்த பார்வைக்கான கண் மருத்துவமனையை நிறுவினார். அமெரிக்காவில் பயிற்சி பெற்ற பிறகு, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் விட்ரியஸ் அறுவை சிகிச்சை மையத்தைத் தொடங்கினார். இது இந்தியாவின் முதல் விட்ரியஸ் அறுவை சிகிச்சை மையமாகும். அதன்பிறகு, 1979ம் ஆண்டு அரவிந்த் கண் மருத்துவமனையில் ரெட்டினா விட்ரியஸ் மையத்தையும் தொடங்கினார்.
இவர் மத்திய அரசின் உதவியுடன் உலக நீரிழிவு அறக்கட்டளை மற்றும் டோக்கியோவின் டாப்கான் நிறுவனத்துடன் இணைந்து நீரிழிவு விழித்திரை நோய்க்கான சிறப்பு மையத்தை நிறுவினார். இதன்மூலம், நீரிழிவு குறித்த விழிப்புணர்வு, சுகாதாரக் கல்வி மற்றும் நீரிழிவு விழித்திரை நோய்க்கான பயிற்சி மற்றும் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுகிறது. கிராமப்புறங்களில் கண் மருத்துவ மையங்களை நிறுவியுள்ளார். டாக்டர் ஜி. வெங்கடசாமி கண் ஆராய்ச்சி நிறுவனத்தை தொடங்குவதிலும் முக்கிய பங்காற்றினார்.
பத்மஸ்ரீ உள்ளிட்ட பல்வேறு உயரிய விருதுகளை பெற்றுள்ளார். டாக்டர் நம்பெருமாள் சாமிக்கு அகில இந்திய கண் மருத்துவ சங்கம் வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்கி கவுரவித்துள்ளது. கடந்த 2010ம் ஆண்டு டைம் இதழ் வெளியிட்ட உலகில் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர்களின் 100 பேர் கொண்ட பட்டியலில் இவர் இடம்பிடித்திருந்தார்.