பிரிந்த மனைவியுடன் தகராறு: முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் கைது; ஜாமினில் விடுவிப்பு
பிரிந்த மனைவியுடன் தகராறு: முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் கைது; ஜாமினில் விடுவிப்பு
UPDATED : மே 24, 2024 05:32 PM
ADDED : மே 24, 2024 10:36 AM

சென்னை: கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழும், மனைவியிடம் தகராறு செய்ததாக, முன்னாள் சிறப்பு டி.ஜி.பி., ராஜேஷ்தாஸை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவருக்கு நீதிமன்ற ஜாமின் வழங்கப்பட்டு விடுவிக்கப்பட்டார்.
சென்னை கேளம்பாக்கம் காவல் நிலைய எல்லையில், தையூரில் ஐ.ஏ.எஸ்., அதிகாரியும், சுகாதாரத்துறை முன்னாள் செயலருமான பீலா வீடு உள்ளது. இவர், ஒடிசா மாநிலத்தை சேர்ந்த, ஐ.பி.எஸ்., அதிகாரி ராஜேஷ்தாசை காதலித்து, 1992ல் திருமணம் செய்தார். இவர்களுக்கு, பிங்கி, பிரீத்தி என இரண்டு மகள்கள் உள்ளனர்.
ராஜேஷ்தாஸ், அ.தி.மு.க., ஆட்சியில் சிறப்பு டி.ஜி.பி.,யாக பணிபுரிந்தார். பின், பெண் ஐ.பி.எஸ்., அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் சிக்கி தண்டனை பெற்றார். அவரை கைது செய்ய சுப்ரீம் கோர்ட் தடை விதித்துள்ளது.
அதேநேரத்தில், கருத்து வேறுபாடு காரணமாக, ராஜேஷ் தாசிடம் இருந்து விலகி, பீலா தனியாக வசித்து வருகிறார். அவர் சட்ட ரீதியாக விவாகரத்து பெறவும் முயற்சி செய்து வருகிறார். பிரிந்து இருக்கும் மனைவி பீலாவின் வீட்டிற்கு ராஜேஷ் தாஸ், 10 நபர்களுடன் சென்று, அத்துமீறி நுழைந்து தகராறு செய்துள்ளார்; காவலாளியையும் மிரட்டி உள்ளார். இதுகுறித்து, பீலா அளித்த புகாரில், கேளம்பாக்கம் போலீசார் ராஜேஷ் தாஸ் மீது வழக்குப் பதிவு செய்த நிலையில் இன்று கைது செய்யப்பட்டார்.
ஜாமினில் விடுதலை
கைது செய்யப்பட்ட ராஜேஷ் தாஸை செங்கல்பட்டு திருப்போரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசார் அழைத்து வந்தனர். அப்போது ராஜேஷ் தாஸ் நெஞ்சு வலிப்பதாக கூறினார். இதனையடுத்து அவரை அழைந்து வந்த வாகனத்தில் அமர வைத்தனர். பின்னர் திருப்போரூர் அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்த பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவருக்கு நீதிமன்ற ஜாமின் வழங்கப்பட்டு விடுவிக்கப்பட்டார்.