காங்., - எம்.எல்.ஏ., மீதான 'காண்டு' ஆட்டம் காட்டும் தி.மு.க., 'மாஜி'
காங்., - எம்.எல்.ஏ., மீதான 'காண்டு' ஆட்டம் காட்டும் தி.மு.க., 'மாஜி'
ADDED : மே 18, 2025 02:26 AM

புதுக்கோட்டை : ஆவுடையார்கோவில் தீயணைப்பு நிலைய கட்டிட அடிக்கல் நாட்டு விழாவில், ஒப்பந்ததாரர் மீது தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., அரிவாளை ஓங்கியது சர்ச்சையாகி உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவிலில் 2.59 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தீயணைப்பு நிலையத்திற்கான கட்டட அடிக்கல் நாட்டு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது.
அறந்தாங்கி தொகுதி காங்.,- எம்.எல்.ஏ., ராமச்சந்திரன் அடிக்கல் நாட்டி பணியை துவக்கி வைத்தார்.
அப்போது, அங்கு வந்த அறந்தாங்கி தொகுதி தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., உதயம் சண்முகம், 'என்னை ஏன் விழாவுக்கு அழைக்கவில்லை' என ஆத்திரமாக கேட்டுள்ளார். பின், கட்டட ஒப்பந்ததாரரை தகாத வார்த்தையில் பேசி, தேங்காய் உடைப்பதற்காக கொண்டு வரப்பட்டிருந்த அரிவாளை எடுத்து, ஒப்பந்தாரரை வெட்ட ஓங்கியதும், பொதுமக்கள் மற்றும் காங்கிரஸார் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஏற்கனவே, தொகுதி எம்.எல்.ஏ., ராமச்சந்திரனுடன் ஏழாம் பொருத்தத்தில் இருக்கும் உதயம் சண்முகம், எம்.எல்.ஏ., மீது இருக்கும் கோபத்தில், ஒப்பந்ததாரரை வெட்ட ஓங்கியதாக சொல்கின்றனர்.
இதுகுறித்து, அறந்தாங்கி எம்.எல்.ஏ., ராமச்சந்திரன் கூறியதாவது:
அறந்தாங்கி தொகுதியில் காங்., சார்பில் எம்.எல்.ஏ.,வாக இருப்பது, தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., உதயம் சண்முகத்துக்கு பிடிக்கவில்லை. அதனால், தொடர்ந்து ஏதாவது பிரச்னை செய்து கொண்டிருக்கிறார். ஆவுடையார்கோவில் பகுதியில் தீயணைப்பு நிலைய அடிக்கல் நாட்டு விழாவுக்கு அனைத்து கட்சி பிரமுகர்களும் அழைக்கப்பட்டனர். முன்னாள் எம்.எல்.ஏ., உதயம் சண்முகம், நிகழ்ச்சிக்கு தாமதமாக வந்து, ஒப்பந்ததாரரிடம் மோசமாக நடந்துள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.