தள்ளாட்டத்தில் தி.மு.க., அரசு முன்னாள் கவர்னர் தமிழிசை காட்டம்
தள்ளாட்டத்தில் தி.மு.க., அரசு முன்னாள் கவர்னர் தமிழிசை காட்டம்
ADDED : மே 26, 2025 02:47 AM
சென்னை : தி.மு.க.,வின் நான்காண்டு கால ஆட்சியில், தமிழகத்தின் கடன் 8 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாக, முன்னாள் கவர்னர் தமிழிசை குற்றம்சாட்டினார்.
அவர் அளித்த பேட்டி:
தி.மு.க.,வை விமர்சிக்க கூடாது என அமைச்சர் சேகர்பாபு சொல்ல முடியாது; நாங்கள் விமர்சித்து கொண்டு தான் இருப்போம்.
புதுச்சேரியிலிருந்து நான் தள்ளாடி கொண்டே வந்ததாக கூறுகிறார். 'டாஸ்மாக்' நிறுவனம் வாயிலாக தமிழகம் தள்ளாடி கொண்டிருக்கிறதே, அதை வைத்து சொல்கிறாரா என புரியவில்லை.
ரோட்டில் ஓட்டை விழுந்தது. ஓட்டை விழுந்த அரசுக்கு, ஏன் ஓட்டை போடுகிறீர்கள் என கேட்டேன். இந்த விமர்சனத்துக்கு எதிராகத்தான் கொந்தளிக்கிறார் அமைச்சர். இப்படியெல்லாம் சொல்வதால், விமர்சிப்பதை நிறுத்த மாட்டோம்.
தி.மு.க., அரசின் நான்காண்டு கால ஆட்சியில், 8 லட்சம் கோடி ரூபாயாக தமிழக அரசின் கடன் சுமை அதிகரித்துள்ளது. மத்திய அரசின் பல்வேறு திட்டங்களுக்கு தமிழ் பெயர் வைத்து, 'ஸ்டிக்கர்' ஒட்டியுள்ளனர்.
சமூக நீதிக்கு எதிரான நிகழ்வுகள், இந்த நான்காண்டுகளில் அதிகமாக நடந்துள்ளன. கள்ளச்சாராய சாவுகள் நடந்துள்ளன. வேங்கைவயல் பிரச்னைக்கு நீதி கிடைக்கவில்லை. சட்டம் - ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளது.
தி.மு.க., இளைஞரணி நிர்வாகியால், ஒரு அபலை பெண் பாதிக்கப்பட்டதாக கூறியபோது, அவருக்காக குரல் எழுப்பாமல், தமிழகத்தின் 'அப்பா' இருக்கிறார்.
டாஸ்மாக்கில் ஊழல் நடக்கவில்லை என உச்ச நீதிமன்றம் தெரிவிக்கவில்லை; இடைக்கால தடை தான் வழங்கியுள்ளது. புனிதர்களாக நாங்கள் வெளியே வந்து விட்டதாக பேசுகின்றனர்.
சேகர்பாபு எவ்வளவு தான் கூக்குரல் கொடுத்தாலும், எங்களால் ஊழலை நிரூபிக்க முடியும். அவர்களால் புனிதத்தை நிரூபிக்க முடியாது.
'நாங்கள் டில்லிக்கு காவிக்கொடி, வெள்ளைக்கொடி எடுத்து செல்லவில்லை' என, முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார். நாங்கள் சொல்கிறோம், டாஸ்மாக் ஊழல் கொடியை எடுத்து போயிருக்கிறீர்கள். தி.மு.க., அரசு எல்லாவிதங்களிலும் தள்ளாடி வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.