ரூ.பல கோடி ஜி.எஸ்.டி., மோசடி ' முன்னாள் ஐ.எப்.எஸ்., அதிகாரி கைது
ரூ.பல கோடி ஜி.எஸ்.டி., மோசடி ' முன்னாள் ஐ.எப்.எஸ்., அதிகாரி கைது
ADDED : டிச 25, 2025 06:14 AM

புதுச்சேரி: புதுச்சேரி போலி மருந்து விவகாரத்தில், ஜி.எஸ்.டி., மோசடிக்கு உதவியாக இருந்ததாக, முன்னாள் ஐ.எப்.எஸ்., அதிகாரி எனும் முன்னாள் இந்திய வனத் துறை அதிகாரி கைது செய்யப்பட்டார்.
விசாரணையில், புதுச்சேரி ரெட்டியார்பாளையத்தில் வசித்து வந்த, தமிழகத்தின் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த ராஜா (எ) வள்ளியப்பன், 42, என்பவர் பிரபல நிறுவனங்களின் பெயரில், போலி மருந்துகளை தயாரித்து, நாடு முழுதும் விற்பனை செய்தது தெரிந்தது.
இந்த வழக்கில், வள்ளியப்பன் உள்ளிட்ட 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வள்ளியப்பனிடம் விசாரித்த போது, இரண்டு மருந்து நிறுவனங்கள் பெயரில் ஜி.எஸ்.டி.,யாக பெரும் தொகை கட்ட வேண்டி இருந்தது தெரிந்தது. அதை குறைப்பதற்காக, புதுச்சேரி வனத்துறையில் பணியாற்றி விருப்ப ஓய்வுபெற்ற ஐ.எப்.எஸ்., அதிகாரியான சத்தியமூர்த்தி உதவியை நாடியுள்ளார்.
அவர், ஜி.எஸ்.டி., அலுவலக அதிகாரி ஒருவரின் உதவியுடன், ஜி.எஸ்.டி., தொகையை பெரிய அளவில் குறைத்ததும், அதற்காக வள்ளியப்பன், சத்தியமூர்த்திக்கு 12 கோடி ரூபாய் பணம் கொடுத்ததும் தெரிந்தது.
அதன் படி, தலைமறைவாக இருந்த சத்தியமூர்த்தியை சிறப்பு புலனாய்வு குழுவினர் கைது செய்து, விசாரித்தனர். பின், நேற்று இரவு 7:30 மணிக்கு சத்தியமூர்த்தியை, மாவட்ட தலைமை குற்றவியல் நீதிபதி முன் ஆஜர்படுத்தி, காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.

