விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் முன் தர்ணாவில் ஈடுபட்ட 'மாஜி' அமைச்சர் கைது
விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் முன் தர்ணாவில் ஈடுபட்ட 'மாஜி' அமைச்சர் கைது
ADDED : அக் 25, 2024 09:52 PM

விழுப்புரம்:விழுப்புரத்தில், புகார்கள் மீது நடவடிக்கை எடுக்காத போலீசை கண்டித்து, கலெக்டர் அலுவலகம் முன் தர்ணாவில் ஈடுபட்ட அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சண்முகம் கைது செய்யப்பட்டார்.
திண்டிவனத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சர் சண்முகம், நேற்று காலை, 11:45 மணிக்கு விழுப்புரம் எஸ்.பி., அலுவலகத்திற்கு சென்று, எஸ்.பி.,யை சந்திக்க காத்திருந்தார். 'எஸ்.பி., தீபக் சிவாச், ஐ.ஜி., மீட்டிங்கிற்கு விக்கிரவாண்டிக்கு சென்றுள்ளதால், வர தாமதமாகும்' என, போலீசார் கூறினர். 30 நிமிடம் காத்திருந்த சண்முகம், 12:15 மணிக்கு, கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.
அவரிடம், டி.எஸ்.பி., கார்த்திகேயன் மனு அளிக்க அழைத்தார். அதற்கு அவர், 'மூன்றாண்டாக, 20க்கும் மேற்பட்ட புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. இன்று காலை தகவல் கூறிவிட்டு தான், எஸ்.பி.,யை சந்தித்து மனு அளிக்க வந்தேன். ஆனால் அவர், என்னை புறக்கணித்துவிட்டு எங்கோ செல்கிறார். மக்கள் பிரதிநிதியை அவமதிப்பதா? எஸ்.பி., வரட்டும்; அலுவலகத்திற்குள் வருகிறேன்' என்றார்.
தொடர்ந்து, டி.எஸ்.பி, தலைமையிலான போலீசார், தர்ணாவில் ஈடுபட்ட சண்முகத்தை, 1:00 மணியளவில் கைது செய்து, ஜீப்பில் ஏற்றினர். உடன் நகர செயலர், ஒன்றிய செயலர்கள் உட்பட, 50க்கும் மேற்பட்டோர் போலீஸ் ஜீப் முன் மறியில் ஈடுபட்டனர். ஜீப்பில் இருந்து சண்முகம் இறங்கி வந்து, வழிவிட கூறியதும், கட்சியினர் மறியலை கைவிட்டனர். பின்னர், அவரை போலீசார், விழுப்புரம் தாலுகா போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று, மாலை 3:00 மணிக்கு விடுவித்தனர்.