த.வெ.க.,வில் இணைந்தார் செங்கோட்டையன்; வரவேற்று வீடியோ வெளியிட்டார் விஜய்
த.வெ.க.,வில் இணைந்தார் செங்கோட்டையன்; வரவேற்று வீடியோ வெளியிட்டார் விஜய்
UPDATED : நவ 27, 2025 11:21 AM
ADDED : நவ 27, 2025 10:09 AM

சென்னை: அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இன்று (நவ.,27) நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். அவரை வரவேற்கும் விதமாக நடிகர் விஜய் வீடியோ வெளியிட்டுள்ளார்.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் இணைக்க வேண்டும் என்று குரல் கொடுத்து, தலைமைக்கு காலக்கெடு விதித்தார், செங்கோட்டையன். இதையடுத்து அவரது கட்சிப் பதவிகள் பறிக்கப்பட்டன. முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம், தினகரன், சசிகலா ஆகியோருடன் தேவர் குருபூஜை நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால் கட்சியில் இருந்தும் நீக்கப்பட்டார்.
இதையடுத்து அவர் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைய முடிவு செய்தார். நேற்று விஜய்யை நேரில் சந்தித்தும் பேச்சு நடத்தினார். இதன் தொடர்ச்சியாக இன்று (நவ.,27) பனையூரில் உள்ள தவெக அலுவலகத்திற்கு தனது ஆதரவாளர்களுடன் செங்கோட்டையன் வருகை தந்தார்.
அவரை தவெக கட்சி பொதுச்செயலாளர் ஆனந்த் உள்ளிட்டோர் வரவேற்றனர். பின்னர் தவெகதலைவர் விஜயை சந்தித்த செங்கோட்டையன், கட்சியில் இணைந்தார். அவருக்கு உறுப்பினர் அட்டையை நடிகர் விஜய் வழங்கினார். நிகழ்ச்சியில் திருப்பூர் தொகுதி முன்னாள் எம்.பி., சத்யபாமா உள்ளிட்டோரும் தவெகவில் இணைந்தனர். அனைவருக்கும் விஜய் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
செங்கோட்டையனுக்கு, கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி என நான்கு மாவட்ட தவெக அமைப்பு பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளதாகவும், தலைமை நிர்வாகக்குழுவின் ஒருங்கிணைப்பாளராக அவர் செயல்படுவார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
வீடியோ வெளியீடு
தவெகவில் இணைந்த செங்கோட்டையனை வரவேற்கும் விதமாக, நடிகர் விஜய் வீடியோ வெளியிட்டுள்ளார்.
தினமலர் நேரலை ஒளிபரப்பு
தவெகவில் செங்கோட்டையன் இணைந்தார். வீடியோ வடிவில் செய்தியை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்

