UPDATED : மே 05, 2025 08:04 AM
ADDED : மே 05, 2025 04:51 AM

மதுரை : ''அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமியின் தேர்தல் வியூகத்தால் முதல்வர் ஸ்டாலினுக்கு காய்ச்சல் வந்துவிட்டது'' என முன்னாள் அமைச்சர் உதயகுமார் கிண்டலடித்துள்ளார்.
அவரது வீடியோ அறிக்கை: சட்டசபைக் கூட்டத்தில் தி.மு.க., அரசு, ஜனநாயக படுகொலை செய்துள்ளது. அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமி மக்கள் பிரச்னையை பற்றி விவாதிக்க அனுமதி மறுக்கப்படுகிறது. வாய்ப்பு பெற்று பேசினால் நேரலை துண்டிக்கப்படுகிறது. அவரது விவாதத்திற்கு பதில் கூறமுடியாமல் ஸ்டாலினுக்கு குளிர்காய்ச்சல் வந்துவிட்டது.
மக்கள் தி.மு.க., அரசுக்கு தண்டனை கொடுக்க தயாராகி விட்டனர். அதற்கு சபாநாயகர் முட்டுக் கொடுத்தாலும் தடுக்க முடியாது. இதை மறைக்க தீர்மானம் நிறைவேற்றுவது, குழு போடுவது, பாராட்டு விழா நடத்துவது என முதல்வர் செயல்படுகிறார்.
தமிழகத்தில் மீண்டும் ஜெ., ஆட்சி மலர, பழனிசாமி ராஜதந்திரத்துடன் பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்துள்ளார். இதைக் கண்டு ஸ்டாலின் நாலாந்தரமாக விமர்சிக்கிறார்.
சட்டசபை, பொதுக் கூட்டம், மாவட்ட செயலாளர் கூட்டங்களில் நடுக்கத்தைப் போக்கும் வகையில் அவதுாறு பேசுகிறார்.
குடும்ப வாரிசு அரசியலில் இருந்து தமிழகத்தை மீட்க பழனிசாமி போராடுகிறார். அவர் இன்று தனது சேவை, கருணையால் நிலைத்து நிற்பதே சாதனை. நீங்கள் தமிழ்நாட்டுக்கு கொடுத்திருப்பது வேதனை. கருணாநிதியின் மகனாக பிறந்ததால் உங்களுக்கு அங்கீகாரம். மக்களிடம் திணிக்கப்பட்ட தலைவர் நீங்கள்.
இந்த நாட்டில் சட்டம் ஒழுங்கு, பாலியல் பலாத்காரம், சொத்து, மின் கட்டண வரிகள் பற்றி கவலைப்பட வேண்டிய நீங்கள், பழனிசாமியின் கூட்டணி பற்றி ஆராய்ச்சி செய்கிறீர்கள். அடுத்தாண்டு தேர்தலில் தமிழக முதல்வர் பழனிசாமிதான் என மக்கள் தீர்மானித்து விட்டனர்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.