சகோதரியிடம் ரூ.17 கோடி மோசடி முன்னாள் அமைச்சரின் மகன் கைது
சகோதரியிடம் ரூ.17 கோடி மோசடி முன்னாள் அமைச்சரின் மகன் கைது
ADDED : ஜூன் 18, 2025 12:09 AM

சென்னை:நிறுவனங்களில் முதலீடு செய்து, வருமானம் மற்றும் லாபத்தில் பங்கு தொகை தருவதாக, தனது அக்காவிடம், 17 கோடி ரூபாய் வரை மோசடி செய்த, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சண்முகநாதனின் மகன் ராஜாவை, போலீசார் கைது செய்துள்ளனர்.
துாத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் சண்முகநாதன். அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர். இவரது மகன் ராஜா, 35. துாத்துக்குடி மாநகராட்சி, 59வது வார்டு கவுன்சிலர். இவரது சகோதரி பொன்னரசி, 38. சென்னை அய்யப்பன்தாங்கலில் வசித்து வருகிறார். இவர், தன் தம்பி ராஜா மீது, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது:
என் உடன் பிறந்த தம்பி ராஜா, அவரது மனைவி அனுஷா ஆகியோர், 'ஒமீனா பார்மா டிஸ்டிரிபியூட்டர்ஸ் பிரைவேட் லிமிடெட்' நிறுவனத்தில் பணம் முதலீடு செய்தால், அதில் வரும் வருமானத்தில், 16 சதவீதம் பங்கு தொகை தருவதாக கூறினர். தம்பி என்பதால் சம்மதம் தெரிவித்தேன்.
பண முதலீடுக்காக, ஸ்ரீபெரும்புதுார் அருகே நந்தம்பாக்கத்தில் உள்ள, என் கணவருக்கு சொந்தமான, 2 ஏக்கர் நிலத்தின் பத்திரங்களை வங்கியில் அடமானம் வைத்து, ராஜாவும், அவரது மனைவியும், 11 கோடி ரூபாய் வாங்கிக் கொண்டனர்.
இந்த பணத்தை எனக்கு தெரியாமல், ராஜா தனக்கு சொந்தமான, 'அஷூன் எக்சிம்' என்ற நிறுவனத்திற்கு மாற்றிக் கொண்டார்.
மேலும், துாத்துக்குடி மாவட்டத்தில், 'கோல்டன் புளூ மெட்டல்' என்ற பெயரில், கல்குவாரி தொழில் துவங்க இருப்பதாகவும், அதில் முதலீடு செய்தால், அதிக பங்கு தருவதாகவும் ஆசை வார்த்தை கூறி, என்னிடம் இருந்து, 300 சவரன் நகையையும் பெற்றனர்.
அந்த நகையை, என் அனுமதியின்றி அடமானம் வைத்து, துாத்துக்குடி மாவட்டத்தில், 40 ஏக்கர் நிலத்தை வாங்கி உள்ளனர்.
எனக்கு நிறுவனங்களில் வரும் வருமானம் மற்றும் லாபத்தில் பங்கு கொடுக்கக்கூடாது என்பதற்காக, ராஜாவும், அனுஷாவும், என்னை போல கையெழுத்திட்டு, போலி ஆவணங்கள் தயாரித்து, பங்கு தொகையை சட்ட விரோதமாக ராஜாவின் பெயருக்கு மாற்றிக் கொண்டனர்.
நான் கொடுத்தது போல, ராஜினாமா கடிதம் தயார் செய்து, என்னை நிறுவனத்தின் இயக்குனர் பதவியிலிருந்து நீக்கி விட்டனர். எனக்கு பதிலாக அனுஷாவை இயக்குநராக நியமித்துள்ளனர். ராஜாவும், அனுஷாவும், நம்பிக்கை மோசடி மற்றும் கூட்டு சதி செய்து, போலி ஆவணங்கள் தயாரித்து என்னிடமிருந்து, 17 கோடி ரூபாய் வரை மோசடி செய்துள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். ராஜாவும், அனுஷாவும் வெளிநாடுகளுக்கு தப்பி விடக்கூடாது என்பதற்காக, விமான நிலையங்களுக்கு, 'லுக் அவுட் நோட்டீஸ்' வழங்கி இருந்தனர்.
இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் இருந்து, மலேஷியா செல்ல முயன்ற ராஜாவை கைது செய்து, சிறையில் அடைத்துள்ளனர். அவரது மனைவியை தேடி வருகின்றனர்.