அடிப்படை கல்வி கட்டமைப்பை மாற்றாத வரை நாடு முன்னேறாது முன்னாள் துணைவேந்தர் பேச்சு
அடிப்படை கல்வி கட்டமைப்பை மாற்றாத வரை நாடு முன்னேறாது முன்னாள் துணைவேந்தர் பேச்சு
ADDED : நவ 28, 2025 07:05 AM

சென்னை: ''நம் நாடு சுதந்திரம் அடைந்து, 80 ஆண்டுகளை நிறைவு செய்ய உள்ள நிலையிலும், வளரும் நாடாகவே இருப்பது வருத்தம் அளிக்கிறது,'' என, அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி பேசினார்.
சென்னை சகோதயா பள்ளி கூட்டமைப்பின் சார்பில், சி.பி.எஸ்.இ., இணைப்பு பள்ளிகளின் முதல்வர்களுக்கான கருத்தரங்கம், சென்னையில் நேற்று நடந்தது.
இதில், அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி பேசியதாவது:
நாடு சுதந்திரம் பெற்று, 80 ஆண்டுகளை நிறைவு செய்ய உள்ளது. இன்னும் வளர்ந்த நாடாகவே இருக்கிறோம். ஜப்பான், அமெரிக்கா போல, நாம் முன்னேற முடியவில்லை.
நாம் முன்னேற, சிறந்த கல்வி, தனிநபர் வருவாய், நல்ல ஆரோக்கியம் முக்கியம். அதில், மிக முக்கியமானது கல்வி; அதிலும், முக்கியமானது பள்ளிக்கல்வி. நாம், 78 சதவீதம் எழுத்தறிவு பெற்றவர்களாக மாறிவிட்டோம். நிலவில் தண்ணீர் உள்ளதை கண்டறிந்தோம். அதனால், நம் குக்கிராமங்களுக்கு குடிநீர் கிடைக்கப் போகிறதா என்றால் இல்லை.
சிலிக்கான் பள்ளத்தாக்கில் வேலை பெற்று, அங்கேயே தங்கிக் கொள்வது தான், நம் சாப்ட்வேர் இன்ஜினியர்களின் சாதனையா?
நம் கல்வி, நக்சலைட், மாவோயிஸ்ட் உள்ளிட்ட எண்ணற்ற போராளிகளை வளர்த்துள்ளது. இதனால், வீட்டிலும், நாட்டிலும் சண்டை தான் நடக்கிறது. நாட்டின் பொருளாதாரம் வளர்ந்துள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. ஆனாலும், தனிநபர் வருவாயில் நாம் மிக மோசமாக உள்ளோம்.
அண்ணா பல்கலையில் துணைவேந்தராக இருந்த போது, நான் ஒரு முடிவெடுத்தேன். அப்போது, முதல்வராக இருந்த ஜெயலலிதா, அதை மாற்றும்படி கூறினார்.
அவ்வாறு மாற்ற விதியில் இடமில்லை என்று கூறி மறுத்தேன். சட்ட வல்லுனர்கள், கவர்னர் உள்ளிட்டோர் வற்புறுத்தியும், நான் மறுத்து விட்டேன். அப்படி, தெளிவாக இருக்க வைப்பதே கல்வி.
அப்துல் கலாம், 2020ல், இந்தியா வளர்ந்த நாடாக வேண்டும் என்ற கனவுடன் செயல்பட்டார். அவர், கனவுக்கு நிர்ணயித்த காலம் கடந்து ஐந்தாண்டுகளாகி விட்டது.
தற்போது, மோடி, 2047ல் வளர்ந்த நாடாக்குவேன் என கனவு காண்கிறார். நம் நாட்டில் அடிப்படை கல்வியின் கட்டமைப்பை மாற்றாத வரை, நாடு முன்னேறுவது கனவு தான். இந்தியாவை வளர்ந்த நாடாக்க, நம் கல்வி, ஆசிரியர்கள், மாணவர்கள் எல்லாரும் தரத்தில் உயர வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில், ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ்., அதிகாரி சைலேந்திரபாபு, முன்னாள் அமைச்சர் டாக்டர் எச்.வி.ஹண்டே, சி.பி.எஸ்.இ., சென்னை இணை செயலர் அருணிமா மஜும்தார் உட்பட பலர் பங்கேற்றனர்.

