‘மெத்ஆம்பெட்டமைன்’ கடத்தல் நாகையில் நால்வர் சிக்கினர்
‘மெத்ஆம்பெட்டமைன்’ கடத்தல் நாகையில் நால்வர் சிக்கினர்
UPDATED : அக் 18, 2026 08:50 PM
ADDED : அக் 18, 2026 08:46 PM
நாகப்பட்டிணம்: இலங்கைக்கு ‘மெத்ஆம்பெட்டமைன்’ போதை பொருள் கடத்தல் வழக்கில், 4 பேரை மத்திய வருவாய் குற்றப்பிரிவு புலனாய்வு துறையினர் கைது செய்தனர்.
நாகையில் இருந்து கடல் வழியாக, சர்வதேச போதை பொருளான மெத்ஆம்பெட்டமைன், இலங்கைக்கு கடத்தப்படுவதாக, மத்திய வருவாய் புலனாய்வு துறையினருக்கு தகவல் கிடைத்தது.
திருச்சி மண்டலத்தில் இருந்து, மத்திய வருவாய் புலனாய்வு இணை இயக்குனர் கனகசுப்பிரமணியம், கஸ்டம்ஸ் கண்காணிப்பாளர்கள் சசிசேர ஆனந்த், தீபக் ஆகியோர் தலைமையிலான, 20 பேர் கொண்ட அதிகாரிகள் குழுவினர், கடந்த 16ம் தேதி அதிகாலை, நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில் லாட்ஜ் நடத்தி வரும், பிரதாபராமபுரத்தை சேர்ந்த சுகநாதன், 27, என்பவர் வீட்டில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
இதில், 140 கோடி ரூபாய் மதிப்புடைய, 137 கிலோ மெத்ஆம்பெட்டமைன் இருப்பதை கண்டறிந்து, கைப்பற்றினர். விசாரணையில், திருப்பூண்டியை சேர்ந்த வழக்கறிஞர் பூபாலன், 42, தலைமையில், இலங்கைக்கு கடத்தப்படுவது தெரியவந்தது.
சர்வதேச கடத்தல் நபர்களுடன் தொடர்புடைய பூபாலனின் மனைவி இலங்கையை சேர்ந்தவர் என்பதால் இதை சாதகமாக்கி, பூபாலன் சர்வதேச போதை கடத்தல் புள்ளியாக இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து பூபாலன், சுகநாதன் மற்றும் உடந்தையாக இருந்த சுகநாதன் லாட்ஜ் மேனேஜர் மணிகண்டன், 39, அவரது நண்பர் சதீஷ்குமார், 30, ஆகியோரை கைது செய்தனர். அவர்களை 16ம் தேதி இரவு, நாகை, கஸ்டம்ஸ் அலுவலத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர். அக்., 17ம் தேதி இரவு வரை நடந்த விசாரணையில், நால்வரும் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட நால்வரையும், மத்திய புலனாய்வு இயக்குனரக அதிகாரிகள், நேற்று முன்தினம் இரவு, வேதாரண்யம், நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதி சுதா, நால்வரையும் வரும் 30ம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து நால்வரும், நாகை மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டனர்.
