'ஆன்லைன்' வாயிலாக மோசடி: 3 பேர் கைது; ரூ.2.23 கோடி மீட்பு
'ஆன்லைன்' வாயிலாக மோசடி: 3 பேர் கைது; ரூ.2.23 கோடி மீட்பு
ADDED : செப் 24, 2024 07:28 AM

சென்னை: வெளிநாடுகளுக்கு போதை பொருள் கடத்தியதாக, 'பெடெக்ஸ் கூரியர்' நிறுவனத்தில் இருந்து பேசுவதாக மிரட்டி, ஆன்லைன் வாயிலாக கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்த குஜராத்தை சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 2.23 கோடி ரூபாய் மீட்கப்பட்டு உள்ளது.
சென்னையை சேர்ந்த ஒருவரின் மொபைல் போனுக்கு, பெடெக்ஸ் கூரியர் நிறுவனத்தில் இருந்து பேசுவதாக கூறிய மர்ம நபர்கள், 'நீங்கள் வெளிநாட்டிற்கு போதை பொருள் கடத்தி உள்ளீர்கள்.
உங்களை கைது செய்யாமல் இருக்க, 1.18 கோடி ரூபாய் அனுப்ப வேண்டும்' என்று, ஆன்லைன் வாயிலாக மோசடி செய்துள்ளனர்.
இதுகுறித்து, மாநில சைபர் குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, குஜராத்தை சேர்ந்த ரமேஷ் பாய் படாபி போக்ரா 48; பிரேஷ்பாய், 42; விவேக் தாமாஜிபாய், 42 ஆகியோரை நேற்று கைது செய்தனர்.
அதேபோல, டிராய் எனப்படும் தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தில் இருந்து பேசுவதாகவும், 'நீங்கள் சட்ட விரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டுள்ளீர்கள். சி.பி.ஐ., அதிகாரிகள் உங்களை தொடர்பு கொள்வர்' என்று கூறியும், மற்றொரு நபரிடம் கோடிக்கணக்கான ரூபாய் பறிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாகவும், மாநில சைபர் குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். இந்த இரண்டு வழக்குகளிலும், 2.23 கோடி ரூபாயை போலீசார் மீட்டுள்ளனர்.