ADDED : அக் 10, 2025 12:17 AM
சென்னை:'ரேஷன் கடைகளில், முதியோர் ஓய்வூதிய திட்ட பயனாளிகளுக்கு, விரல் ரேகை சரிபார்ப்பு தோல்வி அடைந்தாலும், பதிவேட்டில் கையொப்பம் பெற்று, இலவச, வேட்டி சேலை வினியோகம் செய்ய வேண்டும்' என, ரேஷன் ஊழியர்களுக்கு உணவு வழங்கல் துறை உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து, இயக்குநர் சிவராசு அனுப்பிஉள்ள சுற்றறிக்கை:
தீபாவளி பண்டிகைக்கு, முதியோர் ஓய்வூதிய திட்ட ரேஷன் கார்டுதாரர்களுக்கு, இலவச வேட்டி, சேலை வினியோகிக்க வேண்டும். ரேஷன் கடை ஊழியர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ள பயனாளிகளுக்கு, விற்பனை முனைய கருவி வாயிலாக, விரல் ரேகை பதிவு முறையில் வினியோகம் செய்ய வேண்டும்.
விரல் ரேகை, கருவிழி ரேகை என, இரு வழியாகவும் சரிபார்ப்பு தோல்வி அடைந்தால், உரிய பதிவேடில் கையொப்பம் மற்றும் மொபைல் போன் எண் பெற்று வினியோகம் செய்யலாம்.
மாவட்ட வழங்கல் அதிகாரிகள், இலவச வேட்டி, சேலை வழங்குவது தொடர்பாக, சமூக பாதுகாப்பு திட்ட ஆணையரகத்தில் இருந்து பெறப்படும் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, கிடங்குகளில் இருந்து ரேஷன் கடைகளுக்கு அனுப்புவதை உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.