ADDED : பிப் 21, 2024 03:53 AM

சென்னை : தமிழக அரசின் இலவச பயண திட்டம் வாயிலாக, மாதம் 900 ரூபாய் வரை பெண்கள் சேமிப்பதாக, 'சிட்டிசன் கன்சியூமர் அண்டு சிவில் ஆக் ஷன் குரூப்' என்ற, சி.ஏ.ஜி., அமைப்பு நடத்திய சர்வேயில் தெரிய வந்துள்ளது.
அரசு போக்குவரத்து கழகங்களின் நகர பஸ்களில், பெண்களுக்கான இலவச பயண திட்டம் குறித்து, சி.ஏ.ஜி., சார்பில் சென்னை, கோவை, சேலம், திருவாரூர், திருநெல்வேலி, திருவண்ணாமலை என, ஆறு நகரங்களில், 3,000க்கும் மேற்பட்ட பெண்களிடம் சர்வே நடத்தப்பட்டது. சர்வே அறிக்கையை, சென்னை மாநகர போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் ஆல்பி ஜான் வர்கீஸ் நேற்று வெளியிட்டார். அதில்,
* இலவச பயண திட்டத்தால், மூன்றில், இரண்டு பங்கு பெண்கள் மாதம், 400 ரூபாய்க்கு மேல்; 20 சதவீத பெண்கள் 601 - 800 ரூபாய் வரை சேமிப்பதாக தெரிவித்துள்ளனர்
* 90 சதவீத பெண்கள் மாதம், 20,000 ரூபாய்க்கும் குறைவாகவே வருவாய் ஈட்டுவதை கருத்தில் கொண்டால், சேமித்த பணம் பயனுள்ளதாகவே இருக்கிறது. சேமிப்பு தொகையில் பெரிய அளவில் வீட்டு தேவைகளுக்கு செலவிட்டு வருவதாக தெரிவித்துள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில், சி.ஏ.ஜி.,யின் செயல் இயக்குனர் சரோஜா, மூத்த ஆய்வாளர் சுமணா உட்பட பலர் பங்கேற்றனர்.

