ADDED : மார் 30, 2025 03:14 AM

சென்னை: மனைவியை தாக்கிய வழக்கில், இரண்டு ஆண்டுகளாக வெளிநாட்டில் தலைமறைவாக இருந்தவர், சென்னை வந்த போது விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
திருச்சி மாவட்டம், முசிறியைச் சேர்ந்தவர் பாரூக் அலி தாவூத், 46. இவர் தன்னை அடித்து துன்புறுத்துவதாக அவரது மனைவி, முசிறி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் 2022ல் புகார் அளித்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதையறிந்த பாரூக் அலி தாவூத், வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றார்.
அதனால், திருச்சி மாவட்ட போலீஸ் எஸ்.பி., 2022ம் ஆண்டு, பாரூக் அலி தாவூத்தை, தேடப்படும் தலைமறைவு குற்றவாளியாக அறிவித்தார். இவ்விபரம், அனைத்து சர்வதேச விமான நிலையங்களுக்கும் தெரிவிக்கப் பட்டது.
நேற்று முன்தினம் இரவு, சவுதி அரேபியா தலைநகர் ரியாத்தில் இருந்து, இலங்கை வழியாக சென்னை வந்த விமான பயணியரின் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை, விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் பரிசோதித்தனர். அதில் வந்த பாரூக் அலி தாவூத் பாஸ்போர்ட் ஆவணங்களை பரிசோதித்த போது, அவர் தேடப்பட்டு வரும் தலைமறைவு குற்றவாளி என்பது தெரியவந்தது.
உடனடியாக குடியுரிமை அதிகாரிகள் அவரை பிடித்து, சென்னை விமான நிலைய மகளிர் போலீசிடம் ஒப்படைத்தனர். தகவல் அறிந்து முசிறி அனைத்து மகளிர் போலீஸ் நிலைய போலீசார் சென்னை வந்து, அவரை முசிறிக்கு அழைத்து சென்றனர்.