கோவை, மதுரை மெட்ரோ திட்டத்திற்கு நிதி: மத்திய அரசிடம் கேட்கிறார் ஸ்டாலின்
கோவை, மதுரை மெட்ரோ திட்டத்திற்கு நிதி: மத்திய அரசிடம் கேட்கிறார் ஸ்டாலின்
UPDATED : அக் 26, 2024 04:13 PM
ADDED : அக் 26, 2024 04:06 PM

சென்னை: '' கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு நிதி ஒதுக்க வேண்டும் என மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளேன்,'' என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
மத்திய நகர்ப்புற மற்றும் வீட்டுவசதி வாரியத்துறை அமைச்சர் மனோகர் லால் கட்டாரை, சென்னையில் முதல்வர் ஸ்டாலின் சந்தித்து பேசினார். தொடர்ந்து இருவரும் அதிகாரிகளுடன் சென்னை மெட்ரோ ரயில் திட்டம் குறித்து ஆலோசனை நடத்தினர்.
இதன் பிறகு முதல்வர் ஸ்டாலின் 'எக்ஸ்' சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: சென்னை மெட்ரோ இரண்டாவது கட்ட ரயில் திட்டம் குறித்து மத்திய அமைச்சர் மனோகர்லால் கட்டாரை சந்தித்து பேசினேன். எனது கோரிக்கையை ஏற்று இரண்டாவது கட்ட ரயில் திட்டத்தை 118.9 கி.மீ., தூரத்திற்கு விரிவுபடுத்துவதற்கு அனுமதி அளித்த மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்தேன். மேலும் இந்த திட்டத்தை விரைவாக செயல்படுத்துவது குறித்து அவரிடம் விளக்கமளிக்கப்பட்டது.
மேலும், கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு விரைவாக நிதி ஒதுக்குவதில் மத்திய அரசு ஆதரவு அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளேன். இவ்வாறு அந்த பதிவில் ஸ்டாலின் கூறியுள்ளார்.