ADDED : டிச 24, 2024 07:01 AM

சென்னை : காமராஜர் ஆட்சியில் அமைச்சராக இருந்த கக்கனின், இரண்டாவது மகன் பாக்கியநாதன் காலமானார்.
மதுரை மாவட்டம் மேலுார் தும்பைப்பட்டியில், ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர் கக்கன்; காமராஜர் ஆட்சியில் அமைச்சராக இருந்தார்.
காமராஜர் போலவே, எளிமையான, நேர்மையான மனிதராக இருந்தார். அவருக்கு ஐந்து மகன்கள், ஒரு மகள்.
இரண்டாவது மகன் பாக்கியநாதன், 82. இதயம் மற்றும் சிறுநீரக பிரச்னையால் பாதிக்கப்பட்டார்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன், சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முதல்வர் காப்பீடு திட்ட அட்டை இல்லாததால், சில பரிசோதனைகளுக்கு, 4,000 ரூபாய் வரை செலவு செய்ய வேண்டியிருந்தது.
எனவே, மருத்துவச் செலவுக்கு உதவும்படி, பாக்கியநாதன் மனைவி சரோஜினி தேவி, முதல்வர் தனிப்பிரிவில் மனு அளித்தார்.
அதன்பின், மருத்துவமனையில் கட்டண வார்டுக்கு மாற்றப்பட்டார். அனைத்து மருத்துவ பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள் இலவசமாக அளிக்கப்பட்டன.
சில மாதங்கள் தொடர்ந்த சிகிச்சைக்கு பிறகு, உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. அதனால், சென்னை வியாசர்பாடியில் உள்ள மகன் வீட்டுக்கு சென்றார்.
தொடர் உடல்நல பிரச்னையால், அவ்வப்போது மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் இரவு, வீட்டில் பாக்கியநாதன் காலமானார்.
த.மா.கா., தலைவர் வாசன் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.