அன்புமணிக்கு பதில் காந்திமதி? இன்று முடிவெடுக்கிறார் ராமதாஸ்
அன்புமணிக்கு பதில் காந்திமதி? இன்று முடிவெடுக்கிறார் ராமதாஸ்
ADDED : செப் 01, 2025 04:29 AM

திண்டிவனம் : பா.ம.க.,வில் இருந்து அன்புமணி நீக்கப்படுவாரா? அவருக்கு வழங்கப்பட்ட செயல் தலைவர் பதவி பறிக்கப்படுமா என்பது குறித்து கட்சியின் நிறுவனர் ராமதாஸ் இன்று முடிவு எடுக்கிறார்.
பா.ம.க.,வில் அப்பா ராமதாஸ் -- மகன் அன்புமணி இடையிலான மோதல், பல மாதங்களாக நீடித்து வரும் நிலையில், இருவரும் தனித்தனியே பொதுக்குழுவை கூட்டி, 'நானே தலைவர்' என தீர்மானம் நிறைவேற்றினர்.
இருவருமே, எதிர் தரப்பு ஆதரவாளர்களை நீக்கியும், தங்கள் தரப்பு ஆதரவாளர்களை பதவியில் நியமித்தும் தொடர்ந்து அறிவிப்பு வெளியிட்டனர்.
இந்நிலையில், கடந்த 17ம் தேதி, புதுச்சேரியில் ராமதாஸ் தலைமையில் கூடிய பா.ம.க., பொதுக்குழுவில், 'கட்சி நிறுவனர் ராமதாசை எதிர்த்து பேசியது, பனையூரில் தனி அலுவலகம் அமைத்தது, சமூக வலைதளங்களில் ராமதாசை அவதுாறாக சித்தரித்தது, தைலாபுரம் வீட்டில் ஒட்டு கேட்பு கருவி வைத்தது' என, அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
இந்த குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளிக்க, நேற்று வரை காலக்கெடு விதித்து நோட்டீஸ் அனுப்பப்பட்டது. மேலும், அவரது ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் மூவருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால், அன்புமணி உள்ளிட்டோர் எவ்வித பதிலும் அளிக்கவில்லை.
இந்நிலையில், ராமதாஸ் தலைமையில் பா.ம.க., ஒழுங்கு நடவடிக்கை குழு கூட்டம், தைலாபுரத்தில் இன்று கூடுகிறது.
அதில், அன்புமணியை பா.ம.க.,வில் இருந்து நீக்குவதா? அல்லது அவருக்கு வழங்கிய செயல் தலைவர் பதவியை பறிப்பதா என்பது குறித்த முடிவை ராமதாஸ் அறிவிப்பார் என, அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.
இதற்கிடையே, தைலாபுரத்தில் நேற்று, பா.ம.க., சமூக ஊடகப்பேரவை கூட்டம், ராமதாஸ் தலைமையில் நடந்தது. மாநிலம் முழுதும் இருந்து நிர்வாகிகள் பங்கேற்றனர். இது குறித்து, பேரவையின் மாநில ஒருங்கிணைப்பாளர் சோழகுமார் கூறியதாவது:
அன்புமணி மீதான 16 குற்றச்சாட்டுகள் குறித்து அவர் இதுவரை விளக்கம் அளிக்கவில்லை. அன்புமணி மீது எந்தவிதமாக நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து, ஒழுங்கு நடவடிக்கை குழுவினரும், கட்சியின் நிறுவனர் ராமதாசும் கலந்து பேசி இறுதி முடிவெடுப்பர்.
அரசியல் ரீதியான விமர்சனங்களை நாகரிமாகவும், நயமாகவும் கையாள வேண்டும் எனவும், சட்டசபை தேர்தல் வியூகங்களை சமூக வலைதளம் வாயிலாக கையாள்வது குறித்தும் ராமதாஸ் அறிவுரை வழங்கினார்.
தைலாபுரத்தில் உள்ள அரசியல் பயிலரங்கம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. அதில், இளைஞர்கள், இளம்பெண்களை பயிற்சி பெற வைத்து, கிராமங்கள்தோறும் அனுப்பி, சட்டசபை தேர்தலை சந்திக்கவும் ராமதாஸ் அறிவுறுத்தினார். இவ்வாறு அவர் கூறினார்.
மகன் அன்புமணியுடன் மோதல் நீடித்து வரும் நிலையில், தன் மூத்த மகள் ஸ்ரீ காந்திமதியை, பா.ம.க., நிர்வாகக் குழு உறுப்பினராக ராமதாஸ் ஏற்கனவே நியமித்துள்ளார்.
எனவே, கட்சியிலிருந்து அன்புமணி நீக்கப்பட்டால், ஸ்ரீ காந்திமதிக்கு செயல் தலைவர் பதவி வழங்க வாய்ப்புள்ளதாகவும் பா.ம.க., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.