ADDED : டிச 05, 2024 04:55 AM
கோவை : கோவையை சேர்ந்த சரவணன் மனைவி சுகந்தி, 42, கோவை கோர்ட்டில் வழக்கறிஞர். இவரின் உதவியாளர் ரஞ்சித் குமார், 30, என்பவர் அப்துல் கனி, முகமது ரபிக், அப்துல் வகாப், ஜாகிர் உசைன் ஆகியோரை, சுகந்திக்கு அறிமுகம் செய்து வைத்தார். பங்குச்சந்தையில் முதலீடு செய்து, அதிக லாபம் ஈட்டி வருவதாக அவர்கள் உறுதியாக தெரிவித்ததாக கூறப்படுகிறது.
மேலும், தங்களிடம் பணம் கொடுத்தால், பங்கு சந்தையில் அதை முதலீடு செய்து, இரட்டிப்பு லாபம் தருவதாகவும் கூறினர். இதை நம்பிய சுகந்தி, தன் வங்கிக்கணக்கில் இருந்து, 30 லட்சம் ரூபாயை பல தவணைகளாக அப்துல் கனியின் வங்கி கணக்கிற்கு அனுப்பினார்.
பல நாட்களாகியும், அவர்கள் தெரிவித்தது போல லாப பணத்தை சுகந்திக்கு தரவில்லை. நீண்ட நாட்கள் ஆகியும் அசல் மற்றும் லாபம் தராததால் சுகந்தி, அப்துல் கனியின் வீட்டிற்கு சென்று கேட்டார்; பணம் தர மறுத்ததால், போலீசில் புகார் அளித்தார்.
அப்துல் கனி, முகமது ரபிக், அப்துல் வகாப், ஜாகிர் உசைன் மற்றும் ரஞ்சித் ஆகியோர் மீது, ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.