துபாய்க்கு செம்மரம் கடத்த முயற்சி கும்பல் தலைவன் சென்னையில் கைது
துபாய்க்கு செம்மரம் கடத்த முயற்சி கும்பல் தலைவன் சென்னையில் கைது
ADDED : மே 27, 2025 10:39 PM
சென்னை:நான்கு ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த சென்னையை சேர்ந்த செம்மரக்கட்டை கடத்தல் கும்பல் தலைவனை, அமலாக்கத் துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
சில தினங்களுக்கு முன், சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் இருந்து இரும்பு பொருட்கள் என்ற பெயரில், துபாய்க்கு கடத்தப்படவிருந்த 68 கோடி ரூபாய் மதிப்புள்ள செம்மரக் கட்டைகளை, டி.ஆர்.ஐ., எனப்படும், மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதன் பின்னணியில், சென்னையைச் சேர்ந்த, செம்மரக்கட்டை கடத்தல் கும்பல் தலைவன் அப்துல் ஜாபர், 48, இருப்பது தெரியவந்தது. செம்மரக்கட்டை கடத்தல் விவகாரத்தில் சட்டவிரோத பண பரிமாற்றம் நடந்து இருப்பதால், மஹாராஷ்டிரா மாநிலம், நாக்பூர் மண்டல அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
கடந்த 22ம் தேதி, சென்னையில் அப்துல் ஜாபர் தொடர்புடைய இரண்டு இடங்களில் சோதனை நடத்தினர். அப்போது, அப்துல் ஜாபரும் அவரின் கூட்டாளிகளும் செம்மரக்கட்டை கடத்தல் வாயிலாக, பல கோடி ரூபாய்க்கு வீடு, மனை, சொகுசு பங்களா மற்றும் வாகனங்கள் வாங்கி இருப்பதை கண்டறிந்தனர். அதற்கான ஆவணங்களையும் கைப்பற்றினர்.
அத்துடன், அப்துல் ஜாபரை பிடித்தும் விசாரித்தனர். அவர் நான்கு ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தது தெரியவந்தது. சத்தீஸ்கரில் இருந்து துபாய்க்கு, 13 துண்டுகளாக, செம்மரக்கட்டைகள் கடத்த முயன்றதை ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து, அப்துல் ஜாபரை கைது செய்து நாக்பூருக்கு அழைத்துச் சென்றனர். அங்குள்ள சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை அமலாக்கத் துறை அதிகாரிகள், நான்கு நாட்கள் காவலில் விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
ஆந்திராவில் இருந்து, பழைய இரும்பு மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை வாங்கி, அதன் அடியில் செம்மரக் கட்டைகளை மறைத்து, சென்னைக்கு கடத்தி வந்து பதுக்கி வைத்து இருந்ததாக, அப்துல் ஜாபர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
பதுக்கல் செம்மரக் கட்டைகளை தன் கூட்டாளிகள் வாயிலாக, வெளிநாடுகளுக்கு கடத்தும் தொழிலில் ஈடுபட்டதாகவும் கூறியுள்ளார். அவரது கூட்டாளிகளை, அமலாக்கத் துறை அதிகாரிகள் தேடி வருகின்றனர்.