படிக்கிற பசங்க செய்யுற வேலையா இது! அதிகாலை ரெய்டில் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!
படிக்கிற பசங்க செய்யுற வேலையா இது! அதிகாலை ரெய்டில் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!
UPDATED : ஆக 31, 2024 10:25 AM
ADDED : ஆக 31, 2024 10:16 AM

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே பிரபல தனியார் கல்லூரி மாணவர்கள் தங்கியுள்ள விடுதிகளில் போலீசார் அதிரடி ரெய்டு நடத்தி கஞ்சா, போதை பொருட்களை கைப்பற்றினர்.
காட்டாங்குளத்தூரில் பிரபலமான கல்லூரியாக அறியப்படும் தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த கல்லூரி பிரபல அரசியல் கட்சித் தலைவருக்குச் சொந்தமானதாகும். இங்கு வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்லாது, வெளி மாநிலங்கள், வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களும் பயில்கின்றனர். கல்வியாளர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் புகழ்பெற்ற இந்த கல்லூரியின் சுற்றுவட்டார பகுதிகளில் கஞ்சா, போதை மாத்திரைகள் பயன்படுத்தப்படுவதாக காவல்துறைக்கு புகார்கள் பறந்தன.
இதையடுத்து, சம்பந்தப்பட்ட பொறியியல் கல்லூரியை சுற்றியுள்ள பகுதிகளில் அமைந்துள்ள தனியார் விடுதிகள், அறைகளில் இன்று அதிகாலை அதிரடியாக ரெய்டில் இறங்கினர். கிட்டத்தட்ட 500க்கும் மேற்பட்ட போலீசார் பெரும் படையாக சென்று சோதனையில் ஈடுபட்டனர்.
தனியார் விடுதிகள், மாணவர்கள் வெளியில் தங்கி உள்ள அறைகள் என அனைத்தையும் ஒட்டு மொத்தமாக தங்களது கண்ட்ரோலில் கொண்டு வந்தனர். பொத்தேரி, கூடுவாஞ்சேரி, பீர்க்கன்கரணை, தாம்பரம் உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள தனியார் விடுதி அறைகளில் சோதனை நடத்தினர்.
இந்த அதிகாலை அதிரடி சோதனையில் பலரின் அறைகளில் இருந்து ஏராளமான கஞ்சா பொட்டலங்கள், போதை வஸ்துகள் உள்ளிட்ட பொருட்களை கைப்பற்றினர். போதை மாத்திரைகளை வைத்திருந்ததாக மொத்தம் 30 மாணவர்களை போலீசார் கைது செய்து விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.