சமச்சீர் கல்வி முறையா? ஏ.பி.எல்., முறையா? : துவக்கக்கல்வி ஆசிரியர்கள் குழப்பம்
சமச்சீர் கல்வி முறையா? ஏ.பி.எல்., முறையா? : துவக்கக்கல்வி ஆசிரியர்கள் குழப்பம்
ADDED : ஆக 21, 2011 01:56 AM
தேனி : துவக்கக்கல்வியில், ஏ.பி.எல்., பாடத்திட்டத்துக்கும், சமச்சீர் கல்வி பாடப்புத்தகத்துக்கும் அதிக வித்தியாசம் இருப்பதால், எந்த முறையை பின்பற்றுவது என்பது குறித்து ஆசிரியர்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில், சில ஆண்டுகளுக்கு முன், அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மூலம் துவக்கக்கல்வியில், ஏ.பி.எல்., எனும் செயல்வழிகற்றல் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
இதில், புத்தகத்தில் உள்ள பாடங்கள் அனைத்தும் தனித்தனி லேமினேஷன் செய்யப்பட்ட வண்ண அட்டைகளாக அச்சிடப்பட்டு, வகுப்பறை அலமாரியில் அடுக்கப்பட்டன. மாணவர்கள் தாங்களாகவே படித்துக்கொள்ளும் முறை இக்கல்வி முறையில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டாலும், அதை கொண்டு, வகுப்புகளில் பாடம் நடத்தப்படுவதில்லை. அதில் உள்ள பெரும்பாலான பாடங்கள், வண்ண அட்டைகளாக ஏ.பி.எல்., முறையில் ஏற்கனவே பள்ளியில் கற்றுக்கொடுக்கப்படுகிறது. எனவே, ஒரு மாணவன் தனது கற்றல் நேரத்துக்கு மட்டுமே புத்தகங்களை பயன்படுத்தும் சூழல் இருந்தது. தற்போது, தமிழகத்தில், ஒன்றாம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரை சமச்சீர் கல்வி முறை அமல்படுத்தப்பட்டு, அனைவருக்கும் புதிய பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளது. இதில், ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான துவக்கக்கல்வி புத்தகங்களுக்கும், ஏற்கனவே வழங்கப்பட்டிருக்கும் ஏ.பி.எல்., அட்டையில் உள்ள பாடத்திட்டத்துக்கும் ஏராளமான வித்தியாசங்கள் உள்ளன. இதனால் ஏ.பி. எல்., முறையில் படிக்கும் மாணவர்களால், சுயமாக சமச்சீர் கல்வி புத்தகங்களை படிக்க முடியாத நிலை உருவாகியுள்ளது.
புத்தகத்தை கொண்டும் பாடம் நடத்த வேண்டிய கட்டாயத்துக்கு ஆசிரியர்கள் உள்ளாகியுள்ளனர். ஏ.பி.எல்., முறையில் பாடம் நடத்தும்போது, புத்தகத்தை கொண்டு, பாடம் நடத்தும் பழைய நடைமுறை பின்பற்றக்கூடாது எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதனால், சமச்சீர் கல்வி புத்தகத்தை பாடமாக நடத்துவது குறித்து துவக்கக்கல்வி ஆசிரியர்களிடையே பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து துவக்கக்கல்வி ஆசிரியர்கள் கூறியதாவது: கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் அச்சிடப்பட்ட ஏ.பி.எல்., வண்ண அட்டைகள் முழுவதும், பழைய பாடத்திட்டத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டவை. தற்போது, சமச்சீர் கல்வி பாடப்புத்தகத்துக்கும், இந்த ஏ.பி.எல்., அட்டைகளுக்கும் இடையே ஏராளமான வேறுபாடு உள்ளது. இவற்றை இணைக்கும் வகையில், புதிய ஏ.பி.எல்., அட்டைகளோ, அதுகுறித்த பயிற்சிகளோ ஆசிரியர்களுக்கு இதுவரை வழங்கப்படவில்லை. இதனால் சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தை அரசு பள்ளிகளில் அமல்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சமச்சீர் கல்வி புத்தகத்தை கொண்டு, பாடம் நடத்தினால், ஏ.பி.எல்., முறையை கைவிட வேண்டியிருக்கும். ஆனால், அதுகுறித்தும் தெளிவான அறிவுறுத்தல்கள் வழங்கப்படவில்லை. இதனால், சமச்சீர் புத்தகத்தை கொண்டு, பாடம் நடத்துவதா அல்லது பழைய பாடத்திட்டத்தை அடிப்படையாக கொண்டு, தயாரிக்கப்பட்ட ஏ.பி.எல்., முறையில் பாடம் நடத்துவதா என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து உடனடியாக தமிழக அரசு நடவடிக்கை எடுத்து ஆசிரியர்களின் குழப்பத்தை தீர்த்து வைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.