வரியில்லா ஒப்பந்த நாடுகளுக்கு ஆடை ஏற்றுமதி 9% உயர்வு
வரியில்லா ஒப்பந்த நாடுகளுக்கு ஆடை ஏற்றுமதி 9% உயர்வு
ADDED : டிச 30, 2024 11:49 PM

திருப்பூர் : நம் நாடு, ஒன்பது நாடுகளுடன் வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் செய்துள்ளது. இவற்றில், வங்கதேசத்துக்கு மட்டும் ஆயத்த ஆடை ஏற்றுமதி நடப்பதில்லை.
பிற நாடுகளான ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஆஸ்திரேலியா, ஜப்பான், கொரியா, மொரீஷியஸ், சுவிட்சர்லாந்து, நார்வே, ஐஸ்லாந்து ஆகியவற்றுடன் ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் அதிகரித்துள்ளது.
வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுத்தியதால், முந்தைய ஆண்டுகளை காட்டிலும், ஒவ்வொரு ஆண்டும் வர்த்தகம் அதிகரித்து வருகிறது.
கடந்த நிதியாண்டின் ஏப்., முதல் அக்., வரையிலான காலகட்டத்தில், 83,933 கோடி ரூபாய்க்கு, ஆயத்த ஆடை ஏற்றுமதி நடந்துள்ளது. நடப்பு நிதியாண்டின், அதே ஏழு மாதங்களில், 91,417 கோடி ரூபாயாக வர்த்தகம் உயர்ந்துள்ளது; இது, 9 சதவீதம் அதிகம்.
ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சிலான ஏ.இ.பி.சி., அதிகாரிகள் கூறுகையில், 'ஒன்பது நாடுகளில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஆஸ்திரேலியா, இந்தியாவின், 'டாப் 10' ஏற்றுமதி நாடுகள் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
குறிப்பாக, அமெரிக்கா, பிரிட்டனுக்கு அடுத்தபடியாக, ஏப்., முதல் அக்., வரையிலான காலகட்டத்தில், 5,594 கோடி ரூபாய் ஆயத்த ஆடைகளை இறக்குமதி செய்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மூன்றாவது இடத்தில் இருக்கிறது' என்றனர்.