'காஸ்' வாடிக்கையாளர்கள் உண்மை சரிபார்ப்பு பணியை வரும் 16க்குள் முடிக்க 'கெடு'
'காஸ்' வாடிக்கையாளர்கள் உண்மை சரிபார்ப்பு பணியை வரும் 16க்குள் முடிக்க 'கெடு'
ADDED : ஆக 05, 2026 04:48 AM

சென்னை: 'சமையல் காஸ் சிலிண்டர் வாடிக்கையாளர்களின், 'இ.கே.ஒய்.சி.,' எனப்படும், 'ஆதார்' சரிபார்ப்பு வாயிலாக, உண்மைத் தன்மையை உறுதி செய்வதற்கான பணியை, வரும் 16ம் தேதிக்குள் முடிக்க வேண்டும்' என, மத்திய அரசு, 'கெடு' விதித்துள்ளது.
இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் நிறுவனங்கள், வீடுகளுக்கு 14.20 கிலோ எடையில், சமையல் காஸ் சிலிண்டர்களை விற்கின்றன.
சிலிண்டர் இணைப்பு பெற்றிருக்கும், பயனாளியின் உண்மைத் தன்மையை சரிபார்க்க, எண்ணெய் நிறுவனங்களுக்கு, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, சிலிண்டர் இணைப்பு யார் பெயரில் உள்ளதோ, அவர் காஸ் ஏஜென்சிக்கு சென்று, கருவியில் விரல் ரேகை அல்லது கண் கருவிழி அல்லது முகம் பதிவு செய்து, 'ஆதார்' சரிபார்ப்பு வாயிலாக, அவரது உண்மைத் தன்மை உறுதி செய்யப் படுகிறது.
இந்த பணியை முடிக்க, பல முறை அவகாசம் நீட்டிக்கப்பட்டது.
எனினும், மொத்தம் உள்ள, 2.40 கோடி வாடிக்கையாளர்களில், இன்னும் 15 சதவீதம் பேர், அந்த பணியை முடிக்காமல் உள்ளனர்.
தற்போது, உண்மைத்தன்மை சரிபார்ப்பு பணியை, வரும், 16ம் தேதிக்குள் முடிக்க, இறுதி அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அதற்குள் விரல் ரேகை பதிவு செய்யாத வாடிக்கையாளர்களுக்கு, சிலிண்டர் மானியம் நிறுத்தப்பட வாய்ப்புள்ளது.
இது குறித்து, எண்ணெய் நிறுவன அதிகாரி ஒருவர் கூறுகையில், 'தகுதியான பயனாளிகளுக்கு, மானியம் கிடைப்பதை உறுதி செய்யவே, உண்மைத்தன்மை சரிபார்ப்பு பணி நடக்கிறது. எனவே, இது வரை அந்த பணியை முடிக்காதவர்கள், ஏஜென்சிக்கு சென்று, விரல் ரேகையை பதிவு செய்ய வேண்டும்' என்றார்.
