காஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை சரி செய்ய வேண்டும்: பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் மீண்டும் கடிதம்
காஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை சரி செய்ய வேண்டும்: பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் மீண்டும் கடிதம்
UPDATED : மார் 11, 2026 03:50 PM
ADDED : மார் 11, 2026 03:27 PM

சென்னை: காஸ் தட்டுப்பாட்டால் தொழில்மயமான தமிழகம் பாதிக்கப்பட்டுள்ளது. பிரதமர் தலையிட்டு அனைத்து பயன்பாடுகளுக்குமான சிலிண்டர்கள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு அவர் எழுதிய கடிதத்தில் கூறியுள்ளதாவது: மேற்காசியப் போர் காரணமாக ஏற்பட்டுள்ள காஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால், மிகவும் தொழில்மயமான தமிழகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. உணவகங்கள் மூடப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.பிரதமர் இவ்விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு, தமிழகத்தில் அனைத்துப் பயன்பாடுகளுக்குமான சிலிண்டர்கள் தடையின்றிக் கிடைப்பதை உறுதிசெய்ய, இதுதொடர்பான துறையினருக்கு உத்தரவிட வேண்டும்.
சிறப்பு விமானங்களை ஏற்பாடு செய்க!
வளைகுடா நாடுகளில் 19 லட்சத்துக்கும் அதிகமான தமிழர்கள் வாழ்ந்து வருகிறார்கள். அங்கு நிலவும் பதற்றமான சூழலைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கான உதவி எண்களைத் தமிழக அரசு அறிவித்திருந்தது. இதுவரை உதவி கோரி 2,600 அழைப்புகள் வந்துள்ளன. பெரும்பாலானோர் தாயகம் திரும்புவதற்கான விமான ஏற்பாடுகளைக் கோரியுள்ளனர். அதில் ஆயிரம் பேரின் தகவல்களைச் சேகரித்து ஏற்கெனவே வெளியுறவுத் துறை அமைச்சகத்துடன் பகிர்ந்துள்ளோம்.பலர் அருகில் உள்ள வேறு நாடுகளில் இருந்து இந்தியா வர வேண்டியுள்ளதால் அவர்களுக்கான விசா உதவிகளையும் செய்ய வேண்டியுள்ளது.
கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த 593 மீனவர்களும் ஈரான் நாட்டில் சிக்கியுள்ளனர். இவற்றைக் கருத்தில் கொண்டு, மேற்காசியாவில் தவிக்கும் தமிழக மக்களைப் பாதுகாப்பாகத் தாயகம் அழைத்து வருவதற்கான சிறப்பு விமானங்கள் உள்ளிட்ட நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
எரிவாயு விநியோக அளவுக் கட்டுப்பாடு
உலகளவில் ஏற்பட்டுள்ள எரிவாயு தட்டுப்பாட்டின் காரணமாக 'அத்தியாவசியப் பொருட்கள் சட்டம் 1995' அமல்படுத்தப்பட்டுள்ளதை வரவேற்கும் அதேவேளையில், மின் நிலையங்களுக்கான எரிவாயு விநியோகத்தைக் கடந்த 6 மாதங்களில் அவர்கள் பயன்படுத்திய அளவில் 65% என நிர்ணயித்திருப்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
குளிர்காலங்களில் குறைந்த அளவில்தான் இந்த மின்நிலையங்கள் எரிவாயுவைப் பயன்படுத்தியிருப்பார்கள். ஆனால், எதிர்வரும் கோடைக்காலத்தில் மின் நுகர்வு உச்சத்தை எட்டும் என்பதால் அவர்களுக்கான எரிவாயு தேவை கூடும்.
மேலும், இப்போது வரை எரிவாயுவைப் பன்படுத்தி வந்த உணவகங்கள் உள்ளிட்ட நுகர்வோரும் தற்போதுள்ள தட்டுப்பாட்டினால் இனி மின்சாரத்தை நாடுவார்கள் என்பதால் மின்சாரத் தேவை மேலும் அதிகரிக்கவே செய்யும். எனவே, 'கடந்த 6 மாதப் பயன்பாட்டில் 65%' என்பதை மாற்றி, கடந்த ஆண்டு இதேகாலகட்டத்தில் பயன்படுத்திய அளவில் 65% என எரிவாயு விநியோக அளவை மாற்றியமைக்க வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

