'காஸ்' வாடிக்கையாளர் சரிபார்ப்புக்கு ரூ.300 வசூலா
'காஸ்' வாடிக்கையாளர் சரிபார்ப்புக்கு ரூ.300 வசூலா
ADDED : ஆக 31, 2026 01:24 AM
மதுரை: தமிழகத்தில் காஸ் இணைப்புகளுக்கான இ.கே.ஒய்.சி., எனப்படும் உண்மைசரிபார்ப்பு பணிக்கு காஸ் வினியோக ஊழியர்கள் சிலர் ரூ.300 கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது.
சமையல் காஸ் சிலிண்டர் வாடிக்கையாளர்களின் 'இ.கே.ஒய்.சி' எனப்படும் உண்மை சரிசார்ப்பு பணியை முடிக்க கொடுக்கப்பட்ட அவகாசம் இன்று (ஆக.31) வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
பொதுத்துறையைச் சேர்ந்த இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் எண்ணெய் நிறுவனங்கள் வீடுகளுக்கு 14.20 கிலோ சமையல் காஸ் சிலிண்டர்களை வினியோகம் செய்கின்றன.
சிலிண்டர் வாங்கிய பின் வாடிக்கையாளரின் வங்கி கணக்கில் மத்திய அரசின் மானியத் தொகை வரவு வைக்கப்படுகிறது.
ஒரே நபரின் பெயரில் பல காஸ் இணைப்புகள் இருப்பதை கண்டறிந்து, முறைகேடான இணைப்புகளை தடுத்து, தகுதியான வாடிக்கையாளர்களுக்கு தடையின்றி சிலிண்டர் வினியோகம் செய்ய கே.ஒய்.சி., சரிபார்ப்பு மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக செயலி வாயிலாக வாடிக்கையாளரின் விபரங்கள் பதிவு செய்யப்படுகின்றன.
இந்நிலையில், வீடுகளுக்கு சிலிண்டர் வினியோகம் செய்ய வரும் ஊழியர்கள் சிலர், 'கே.ஒய்.சி., அப்டேட் செய்ய வேண்டும்' எனக் கூறி, வாடிக்கையாளர்களிடம் ரூ.300 வரை கட்டணம் கேட்பதாக புகார் எழுந்துள்ளது.
எண்ணெய் நிறுவன அதிகாரிகள் கூறிய தாவது:
வாடிக்கையாளர்கள் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை காஸ் சிலிண்டர் பரிசோதனை கட்டணம் ஜி.எஸ்.டி., சேர்த்து ரூ.295செலுத்த வேண்டும். இதற்கும் வாடிக்கையாளர் கே.ஒய்.சி., சரிபார்ப்பு பணிக்கும் சம்பந்தமில்லை. மத்திய அரசு அறிவுறுத்தலில் வாடிக்கையாளர்களின் சரிபார்ப்பு பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்து விட்டன.
கே.ஒய்.சி., சரிபார்ப்பிற்கு பணம் செலுத்த தேவையில்லை. பணம் வசூலிக்கும் ஊழியர்கள் குறித்து வாடிக்கையாளர்கள் புகார் அளித்தால் சம்பந்தப்பட்டோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
