ADDED : ஜூன் 24, 2026 12:09 AM
மதுரை: துாத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலம் மென்பொறியாளர் கவின் 27. இவர் வேறொரு சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை காதலித்தார். 2025 ஜூலை 27 ல் திருநெல்வேலியில் கவின் ஆணவ படுகொலை செய்யப்பட்டார்.
இவ்வழக்கில் கவின் காதலியின் சகோதரர் சுர்ஜித், எஸ்.ஐ.,க்களான தந்தை சரவணன், தாய் கிருஷ்ணகுமாரி, உறவினர் ஜெயபால் மீது சி.பி.சி.ஐ.டி., போலீசார் வழக்கு பதிந்தனர்.
சரவணனுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஜாமின் அனுமதித்தது.
தங்கள் மீது திருநெல்வேலி கீழமை நீதிமன்றத்தில் போலீசார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கையை ரத்து செய்யக்கோரி சரவணன், கிருஷ்ணகுமாரி, ஜெயபால் உயர்நீதிமன்றக் கிளையில் மனு செய்தனர்.
நீதிபதி ஆர்.விஜயகுமார் பிறப்பித்த உத்தரவு: குற்றப்பத்திரிக்கைக்கு ஏற்கனவே விதித்த இடைக்காலத் தடை நீட்டிக்கப்படுகிறது. விசாரணை ஜூலை 13 க்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றார்.
