இஞ்சி, மாதுளை பூச்சாறு, தேன் வறட்டு இருமலுக்கு மருந்து
இஞ்சி, மாதுளை பூச்சாறு, தேன் வறட்டு இருமலுக்கு மருந்து
ADDED : பிப் 21, 2025 01:08 AM
சென்னை:'பருவநிலை மாற்றத்தால் அதிகரித்துள்ள வறட்டு இருமலுக்கு, இஞ்சி, மாதுளை பூச்சாறு, தேன் கலந்த சித்த மருத்துவத்தில் தீர்வு கிடைக்கும்' என, அரசு சித்த மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
சென்னை அரும்பாக்கம் சித்த மருத்துவ கல்லுாரி மருத்துவர் ஆர்.பாஸ்கர் கூறியதாவது:
தற்போது குளிர்ச்சி மற்றும் வறட்சி நிலை காணப்படுவதால், இருமல் பாதிப்பு அதிகரித்து காணப்படுகிறது. இருமல் உள்ளிட்ட பாதிப்புகள் இருந்தால், குளிர்ச்சியான நீர், குளிர் காற்றில் இருப்பதை தவிர்க்க வேண்டும்.
இருமல் பாதிப்புகளை, சில வகை வீட்டு வைத்திய முறையில் குணப்படுத்தலாம். அதன்படி, இஞ்சிச்சாறு, மாதுளை பூச்சாறு, தேன் கலந்து சாப்பிட்டால், இருமலுக்கு தீர்வு ஏற்படுத்தும்.
அதேபோல, சுக்கு, மிளகு, திப்பிலி சம அளவு பொடித்து, ஒன்று முதல் 2 கிராம் பொடியை தேனில் கலந்து தினமும், இரண்டு வேளை சாப்பிட்டாலும், இருமலுக்கு தீர்வாக இருக்கும். ஒரு சிலருக்கு மிளகுத்துாள் 250 முதல் 390 மில்லி கிராம் எடுத்து, நீருடன் கலந்து சாப்பிடும் போது, பசியை துாண்டி, இருமலுக்கும் தீர்வாக அமையும். பூண்டுச்சாறு, தேன் கலந்து சாப்பிட்டு வந்தாலும் இருமலை போக்கும்.
இவற்றில் தீர்வு ஏற்படாவிட்டாலும், சித்த மருத்துவர்களின் ஆலோசனைப்படி, அதிமதுர சூரணத்தை நீரிலும், திரிகடுகு சூரணத்தை நெய்யிலும் சாப்பிட்டு வரலாம். அதேநேரம், காய்ச்சல் உள்ளிட்ட தீவிர பாதிப்பு இருந்தால், உரிய டாக்டரிடம் சிகிச்சை பெறுவது அவசியம்.
இவ்வாறு அவர் கூறினார்.