சிறுமியை கடித்து குதறிய வெளிநாட்டு நாய்கள்: ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை
சிறுமியை கடித்து குதறிய வெளிநாட்டு நாய்கள்: ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை
ADDED : மே 07, 2024 05:12 AM

சென்னை: விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் ரகு. சென்னை நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையில் உள்ள மாநகராட்சி பூங்காவின் காவலாளியாக வேலை செய்கிறார். மனைவி சோனியா, ஐந்து வயது மகள் சுரக் ஷாவுடன் பூங்காவில் உள்ள சிறிய அறையில் வசிக்கின்றனர். உறவினர் மரணத்துக்காக ரகு சொந்த ஊர் சென்றுள்ளார்.
நேற்று முன்தினம் மாலையில் பூங்கா எதிரே வசிக்கும் புகழேந்தி என்பவர், தனது இரண்டு 'ராட்வைலர்' ரக நாய்களுடன் பூங்காவிற்கு வாக் வந்துள்ளார். நாய்களை சங்கிலியால் கட்டாமல் விட்டிருக்கிறார்.
திடீரென அங்கு விளையாடிக் கொண்டிருந்த சிறுமி சுரக் ஷாவை, இரண்டு நாய்களும் பாய்ந்து கடித்தன. கை, கால், தலை என உடல் முழுதும் கடித்ததில் ரத்தம் கொட்டியது. சிறுமியின் தலையை கடித்து இழுத்ததில், தலைமுடியோடு சேர்ந்து மண்டையோட்டு தோல் பிய்ந்து தொங்கியது.
குழந்தையை காப்பாற்ற ஓடிவந்த தாய் சோனியாவையும், நாய்கள் கடித்தன. இருவரின் அலறல் கேட்டு ஓடி வந்த பொதுமக்கள், நாய்களை விரட்டி இருவரையும் மீட்டனர்.
இந்த களேபரத்தில் நாய்களின் உரிமையாளர் நழுவி விட்டதாக மக்கள் கூறினர். சிறுமியை ராஜிவ் காந்தி மருத்துவமனைக்கு அனுப்பினர். சிகிச்சை செலவை ஏற்றுக் கொள்வதாக கூறி, சிறுமியை அப்போலோ மருத்துவமனையில் சேர்க்க நாய் உரிமையாளர் ஏற்பாடு செய்தார்.
உரிமையாளர் புகழேந்தி, 63, மனைவி தனலட்சுமி, 59, மகன் வெங்கடேஸ்வரன், 30 ஆகியோரை ஆயிரம் விளக்கு போலீசார் கைது செய்தனர். இந்திய தண்டனை சட்டம் 289 பிரிவு - பிறர் வளர்க்கும் விலங்கு பிறரை கடித்தோ அல்லது ஏதேனும் செயல் செய்தோ தீங்கு விளைவித்தல்; 336 - மனித உயிர்களுக்கு ஆபத்தை விளைவித்தல் என்ற இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
மூவரும் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர். வீட்டின் கதவு திறந்திருந்ததால், நாய்கள் வீட்டில் இருந்து வெளியேறி, பூங்கா சென்று சிறுமியை கடித்ததாக, காவல்துறை அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
இரண்டு நாய்களும், உரிமையாளரின் வீட்டில் அடைக்கப்பட்டுள்ளன. இவற்றை, என்.ஜி.ஓ.,க்களிடம் ஒப்படைக்க அதிகாரிகள் பேசி வருகின்றனர்.
ராட்வைய்லர், பிட்புல், டெர்ரியர் உள்ளிட்ட 27 அன்னிய இன நாய்களை வளர்க்க, மத்திய அரசு மார்ச் மாதம் தடை விதித்தது. டில்லி ஐகோர்ட் அதை ரத்து செய்தது. ஆனால், மாநகராட்சியிடம் உரிமம் பெறுவது அவசியம்.
உயிருக்கு ஆபத்தில்லை
சிறுமியை கடித்த ராட்வைலர் நாய்கள் உரிமம் பெறாமல் வளர்க்கப்பட்டுள்ளன. உரிமையாளருக்கு மாநகராட்சி 'நோட்டீஸ்' கொடுத்துள்ளது. சிறுமியின் உயிருக்கு ஆபத்து இல்லை. உரிமம் பெறாமல் செல்லப்பிராணி வளர்ப்போர் விபரம் சேகரிக்கப்படும். சம்பவம் குறித்து, கால்நடைதுறையுடன் ஆலோசித்து அடுத்தகட்டநடவடிக்கை எடுக்கப்படும்.
- ஜெ.ராதாகிருஷ்ணன்
கமிஷனர், சென்னை மாநகராட்சி