விக்கிரவாண்டியில் பள்ளி கழிவுநீர் தொட்டியில் விழுந்து குழந்தை பலி; தாளாளர் உட்பட 3 பேர் கைது
விக்கிரவாண்டியில் பள்ளி கழிவுநீர் தொட்டியில் விழுந்து குழந்தை பலி; தாளாளர் உட்பட 3 பேர் கைது
UPDATED : ஜன 04, 2025 03:43 PM
ADDED : ஜன 04, 2025 07:30 AM

விக்கிரவாண்டி: விக்கிவாண்டியில் தனியார் பள்ளி கழிவுநீர் தொட்டியில் விழுந்து 4 வயது குழந்தை லியா லட்சுமி உயிரிழந்த வழக்கில், பள்ளி தாளாளர் எமில்டா, முதல்வர் டோமினிக் மேரி, ஆசிரியர் ஏஞ்சல்ஸ் ஆகிய மூவர் கைது செய்யப்பட்டனர்.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி பழைய போலீஸ் ஸ்டேஷன் எதிரே உள்ள மெயின்ரோட்டை சேர்ந்தவர் பழனிவேல், 34; இவரது மனைவி சிவசங்கரி, 32: இவர்களது ஒரே மகள் லியா லட்சுமி, 4; விக்கிரவாண்டி செயின்ட் மேரீஸ் மெட்ரிக் மேல்நிலைபள்ளியில் எல்.கே.ஜி., படித்து வந்தார். நேற்று பகல் 12.00 மணிக்கு உணவு இடைவேளையின் போது சிறுவர்கள் வகுப்பறையில் இருந்து வெளியே விளையாடிவிட்டு, மீண்டும் வகுப்பறைக்கு சென்றனர்.
ஆசிரியர் ஏஞ்சல், சிறுமி லியா லட்சுமி இல்லாதால் பிற வகுப்பறைகளில் தேடினார். அங்கும் இல்லாததால், சிறுவர்கள் விளையாடிய இடத்தில் தேடியபோது, அருகில் இருந்த கழிவுநீர் தொட்டி மேல் மூடி தகரம் உடைந்திருந்தது. அதன் வழியே பார்த்தபோது, கழிவுநீர் தொட்டிக்குள் குழந்தை இருந்தது தெரிய வந்தது.
உடன் பள்ளி நிர்வாகத்தினர், குழந்தையை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதை உறுதி செய்தனர். தகவலறிந்த டி.எஸ்.பி., நந்தகுமார், இன்ஸ்பெக்டர் பாண்டியன் மற்றும் போலீசார் விரைந்து சென்று, பள்ளியில் கூடியிருந்த பெற்றோர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
இதனால் அதிருப்தி அடைந்த பெற்றோர்கள் மாலை 4.15 மணிக்கு விக்கிரவாண்டி வடக்கு பைபாசில் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து பலியான குழந்தையின் தந்தை அளித்த புகாரின்பேரில் விக்கிரவாண்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், இன்று (ஜன.,04) இந்த வழக்கில் பள்ளி தாளாளர் எமில்டா, முதல்வர் டோமினிக் மேரி, ஆசிரியர் ஏஞ்சல்ஸ் ஆகிய மூவர் கைது செய்யப்பட்டனர். ஆசிரியர் ஏஞ்சல்ஸ்க்கு ஏழு நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.