சிறுமியர் 'வீடியோ' விவகாரம்: 6 பேருக்கு தனிப்படை வலை
சிறுமியர் 'வீடியோ' விவகாரம்: 6 பேருக்கு தனிப்படை வலை
ADDED : ஜன 20, 2025 05:21 AM

சென்னை: மயிலாப்பூர் சிறுமியர் ஆறு பேரை பாலியல் தொழிலில் ஈடுபட வைத்து, அதை வீடியோ எடுத்து, இணையதளத்தில் விற்றது தொடர்பாக, தலைமறைவாக உள்ள ஆறு பேரை, தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
சென்னை மயிலாப்பூரை சேர்ந்த, 16 வயது சிறுமியுடன், இரண்டு வாலிபர்கள் நெருக்கமாக இருக்கும், 'வீடியோ', சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டது.
கவுன்சிலிங்
இதுகுறித்த தகவல், மயிலாப்பூர் மகளிர் போலீசார் கவனத்திற்கு வந்ததும், உடனடியாக விசாரணையில் ஈடுபட்டனர். சிறுமியுடன் நெருக்கமாக இருந்த, பட்டினப்பாக்கம் மற்றும் தாம்பரத்தை சேர்ந்த, இரண்டு வாலிபர்களை பிடித்து விசாரித்தனர்.
அப்போது, பெற்ற மகளையே சிறுமியின் பெற்றோர் பாலியல் தொழிலில் தள்ளி, அதை வீடியோ எடுத்து, இணையதளத்தில் விற்பதாக தெரிவித்தனர். உடன், சிறுமியின் பெற்றோரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அவர்களின் மொபைல்போன்களை ஆய்வு செய்த போது, தங்கள் மகளுடன், மேலும் ஆறு சிறுமியரின் ஆபாச வீடியோக்கள் வைத்திருந்ததையும் கண்டனர்.
தொடர் விசாரணையில், மகளின் தோழிகளையும், பாலியல் தொழிலில் தள்ளி, இத்தகையை பாதக செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, பெற்றோர் உட்பட நான்கு பேரை, 'போக்சோ' சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பாதிக்கப்பட்ட சிறுமியர் ஏழு பேருக்கும், மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அவர்கள் மிகவும் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் இயல்பு நிலைக்கு திரும்ப, 'கவுன்சிலிங்' அளிக்கப்படுகிறது. அத்துடன், சிறுமியின் பெற்றோர் பின்னணியில், முக்கிய புள்ளிகள் இருக்கலாம் என்ற சந்தேகத்தில் விசாரணை நடந்தது.
இந்த விசாரணையில், ஆறு சிறுமியருடன் நெருக்கமாக இருந்த வாலிபர்கள் குறித்து, போலீசார் துப்பு துலக்கி உள்ளனர். அவர்கள் ஏற்கனவே, கைதான இரண்டு வாலிபர்களின் கூட்டாளிகள். தலைமறைவாக உள்ள அந்த ஆறு பேரையும் கைது செய்ய, இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.
கடன் பிரச்னை
இதுகுறித்து போலீசார் கூறியதாவது: சிறுமியின் தாய் அழகு நிலையத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். அங்கு வந்த வாடிக்கையாளர்களுக்கு வலை விரித்து, தன் மகள் உள்ளிட்ட சிறுமியரை, பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி உள்ளார்.
கடன் பிரச்னையில் இருந்து மீள வேண்டும் எனக்கூறி, மகளை இந்த நிலைக்கு ஆளாக்கி உள்ளார். மற்ற சிறுமியரிடம், சீக்கிரம் வாழ்க்கையில் செட்டிலாகலாம். விதவிதமாக உடைகள், நகைகள் வாங்கலாம் என ஆசை வார்த்தை கூறி, பாலியல் தொழிலில் தள்ளி உள்ளனர். அதை வீடியோ எடுத்து விற்றுள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.