அரசுக்கு நல்ல யோசனைகளை சொல்லுங்கள் பொறியாளர்களுக்கு வேலு அறிவுரை
அரசுக்கு நல்ல யோசனைகளை சொல்லுங்கள் பொறியாளர்களுக்கு வேலு அறிவுரை
ADDED : டிச 22, 2024 01:32 AM

சென்னை:''புதிய உதவி பொறியாளர்களிடத்தில் தன்னம்பிக்கையை ஏற்படுத்தி, அதன் வாயிலாக அவர்களின் மன வலிமையை ஊக்குவிக்க வேண்டும்; அனைவரும் ஒன்று சேரும் போது தான் கோரிக்கைகள் வலுப்பெறும்,'' என, பொதுப்பணி துறை அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.
பொதுப்பணி துறை பொறியாளர்கள் சங்க கூட்டம், சென்னை ஆர்.ஏ.புரத்தில் நேற்று நடந்தது.
புதிய யோசனை
இதில், அமைச்சர் எ.வ.வேலு, பொதுப்பணி துறை செயலர் மங்கத்ராம் சர்மா, முதன்மை தலைமை பொறியாளர் சத்தியமூர்த்தி, சென்னை மண்டல தலைமை பொறியாளர் மணிவண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியில், பொதுப்பணித் துறைக்கான காலண்டர் மற்றும் டைரியை வெளியிட்டு, அமைச்சர் வேலு பேசியதாவது:
துறையின் வளர்ச்சிக்கான ஒருமித்த மனப்பான்மையை, நீங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். துறை வளர்ச்சி அடையவும், மேலும் சிறப்பாக செயல்படவும், புதிய யோசனைகளை சொல்லுங்கள்.
புதிதாக பணிக்கு வந்துள்ள உதவி பொறியாளர்களிடத்தில் தன்னம்பிக்கையை ஏற்படுத்தி, அதன் வாயிலாக அவர்களின் மன வலிமையை ஊக்குவிக்க வேண்டும்.
பொறியாளர்கள் அறிவை மேம்படுத்த, தொழில்நுட்ப கையேடுகள் மற்றும் மாதாந்திர இதழ்களை, சங்கம் வெளியிட வேண்டும்.
உழைக்க வேண்டும்
மேலும், அவர்களின் திறனை வளப்படுத்த தொழில்நுட்ப கருத்தரங்கு, மாநாடு நடத்த வேண்டும். ஆட்சி நிர்வாகம், சமூகத்தில் பொறியாளர்களுக்கு அவரவர் தகுதி நிலைக்கு ஏற்ப, உரிய அந்தஸ்து கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.
பாராட்டும் விருதும் கிடைக்க கடுமையாக உழைக்க வேண்டும்.
ஐந்து விரலும் ஒன்று சேரும் போது தான் ஓசை எழும். அதேபோல் தான் அனைவரும் ஒன்று சேரும் போது தான் கோரிக்கைகள் வலுப்பெறும்.
இவ்வாறு அவர் பேசினார்.