'மாற்று திறனாளிகளுக்கு அரசு வேலை கொடுங்க' : அன்புமணி
'மாற்று திறனாளிகளுக்கு அரசு வேலை கொடுங்க' : அன்புமணி
ADDED : டிச 01, 2024 11:52 PM

சென்னை: பா.ம.க., தலைவர் அன்புமணி அறிக்கை:
பார்லிமென்டில், 2016-ல் நிறைவேற்றப்பட்ட மாற்றுத்திறனாளிகள் உரிமை சட்டத்தின்படி, தமிழகத்தில் 2017ல் மாற்றுத்திறனாளிகளுக்கான இட ஒதுக்கீடு, 4 சதவீதமாக உயர்த்தப்பட்டது. ஆனாலும், தமிழக அரசு துறைகளில், குறைந்த எண்ணிக்கையிலான பணிகளே மாற்றுத் திறனாளிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. அவற்றை மறு ஆய்வு செய்து, கூடுதல் பணிகளை ஒதுக்க வேண்டும்.
கடந்த ஆண்டு மாற்றுத்திறனாளிகளுக்கான 4 சதவீதம் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில், ஒவ்வொரு துறையிலும் உள்ள பணியிடங்கள் கண்டறியப்பட்டு, அடுத்த ஓராண்டுக்குள் சிறப்பு ஆள் தேர்வின் வாயிலாக, அவை நிரப்பப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
அரசு துறைகளில், இரு ஆண்டுகளுக்கும் மேலாக தொகுப்பூதியத்தில் பணிபுரியும் மாற்றுத்திறனாளிகளுக்கு விதிகளை தளர்த்தி, முன்னுரிமை அடிப்படையில் நிலையான பணி வழங்கப்படும் என, அரசாணையில் கூறப்பட்டிருந்தது. ஆனால், முதல்வரின் அறிவிப்பும், அரசாணையும், கோப்புகளில் உறங்குகின்றன.
தமிழக அரசு நினைத்தால், மிக எளிதாக சிறப்பு ஆள் தேர்வுகளை நடத்தி, மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு வேலை வழங்கி இருக்கலாம். இனியாவது அதை செய்ய வேண்டும். நடப்பு நிதியாண்டுக்குள், அனைத்து பின்னடைவு பணியிடங்களையும் நிரப்பி, மாற்றுத்திறனாளிகளுக்கு சமூக நீதி வழங்க வேண்டும்.
இவ்வாறு அன்புமணி கூறியுள்ளார்.