அ.தி.மு.க., ஆட்சியில், பொங்கல் தொகுப்புடன் ரொக்க பணமும் சேர்த்து, ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் 2,500 ரூபாய் வழங்கப்பட்டது. மேலும் முழு செங்கரும்பும் வழங்கப்பட்டது.
அப்போது, எதிர்க்கட்சியாக இருந்த தற்போதைய முதலவர் ஸ்டாலின், பொங்கல் தொகுப்புடன் 5,000 ரூபாய் பணம் வழங்க வேண்டும் என்றார்.
இந்த ஆண்டு பொங்கல் தொகுப்பை மட்டும் அரசு அறிவித்துள்ளது. எனவே, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் தொகுப்புடன் 1,000 ரூபாய் வழங்க வேண்டும். 'மிக்ஜாம்' புயல் மற்றும் கன மழையால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் வசிக்கும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் தொகுப்புடன் ரொக்கமாக 5,000 ரூபாய் வழங்க வேண்டும்.
எண்ணுார் முகத்துவாரத்தில் பரவிய கச்சா எண்ணெய் படலத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மீனவர் குடும்பங்கள் ஒவ்வொன்றுக்கும் பொங்கல் தொகுப்புடன் ரொக்கமாக 5,000 ரூபாய் வழங்க வேண்டும்.
கனமழையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள தென் மாவட்டங்களை சேர்ந்த அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் தொகுப்புடன் ரொக்கமாக 5,000 ரூபாய் வழங்க வேண்டும். பொங்கல் பரிசாக வழங்கப்படும் கரும்பு கொள்முதலில் எந்தவிதமான முறைகேடுகளுக்கும் இடம் தராமல், நேரடியாக கரும்பு சாகுபடி விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்ய வேண்டும்.
- பழனிசாமி,
பொதுச்செயலர், அ.தி.மு.க.,