ADDED : நவ 27, 2025 02:15 AM
சென்னை: பூர்வீக ஆடு வகை மற்றும் பன்றிகளை பாதுகாக்க, உற்பத்தியை பெருக்க, ஆடு இனப்பெருக்க கொள்கை மற்றும் பன்றி வளர்ப்பு கொள்கையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
சென்னை கால்நடைத்துறை தலைமை அலுவலகத்தில் நடந்த நிகிழ்ச்சியில், கால்நடைத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், கொள்கையை வெளியிட்டார். அதில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் நடந்த 20வது கால்நடை கணக்கெடுப்பின்படி, செம்மறி ஆடுகள் 45 லட்சம்; வெள்ளாடுகள் 98.88 லட்சம் உள்ளன. தற்போது, செம்மறி ஆடு மற்றும் வெள்ளாடுகளை இனப்பெருக்கம் செய்வதற்கு, எந்தவொரு நிலையான கொள்கையும் இல்லை.
குறைந்த முதலீட்டில், நாடோடி மேய்ச்சல் முறைகளின் கீழ், செம்மறி மற்றும் வெள்ளாடுகளை லாபகரமாக வளர்க்க முடியும். இந்த கொள்கை வாயிலாக, பூர்வீக இனங்களை பாதுகாக்கலாம்.
பூர்வீக செம்மறி ஆடு மற்றும் வெள்ளாடு இனங்களை பாதுகாப்பது, மரபணு மேம்பாடு போன்றவை, ஆடு இனப்பெருக்க கொள்கையின் முக்கிய அம்சங்களாகும்.
குறைவாக உள்ள செம்மறி ஆடு வகைகளை, தனித் துவ இனங்களாக அடையாளம் காணவும், வகைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், பன்றி வளர்ப்பு கொள்கையில், 'மரபணு திறனை மேம்படுத்துதல், மேம்பட்ட வகையைச் சேர்ந்த, தனிநிலை நாட்டுப் பன்றிகளின் இனப்பெருக்க திசுக்களை பாதுகாத்தல் மற்றும் பராமரித்தல் போன்றவை செயல்படுத்தப்படும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

