ராக்கெட் வேகத்தில் உயரும் தங்கம் விலை: சவரனுக்கு ரூ.840 அதிகரிப்பு
ராக்கெட் வேகத்தில் உயரும் தங்கம் விலை: சவரனுக்கு ரூ.840 அதிகரிப்பு
UPDATED : ஆக 17, 2024 03:33 PM
ADDED : ஆக 17, 2024 11:21 AM

சென்னை: சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.840 உயர்ந்து, சவரன் ரூ.53,360க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 7 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,240 அதிகரித்துள்ளது.
கடந்த சில தினங்களாக தங்கம் விலை ஏற்றம் இறக்கத்தை கண்டு வருகிறது. அதன்படி, ஒவ்வொரு நாளும் தங்கம் விலை உயருமா? அல்லது இறங்குமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்து வருகிறது. சமீபத்தில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரியை, 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைப்பதாக அறிவித்தார். இதையடுத்து சில நாட்களாக தங்கம் விலை குறைந்து வந்தநிலையில், தற்போது மீண்டும் உயர்ந்து வருகிறது.
அதிகரிப்பு
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (ஆக. 16) சவரன் ரூ.52,520-க்கு விற்கப்பட்டது. ஒரு கிராம் ரூ.6,565க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று (ஆக. 17) 22கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.840 உயர்ந்து, ரூ.53,360க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.105 உயர்ந்து ரூ.6,670க்கு விற்பனை செய்யப்படுகிறது.கடந்த 7 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,240 அதிகரித்துள்ளது.
வெள்ளி விலை நிலவரம்
வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ரூ.91க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.91,000க்கும் விற்பனையாகிறது.

