ரூ.10 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்: புதுக்கோட்டைக்கு கடத்த முயன்றபோது 'செக்'
ரூ.10 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்: புதுக்கோட்டைக்கு கடத்த முயன்றபோது 'செக்'
ADDED : மே 14, 2024 03:11 PM

புதுக்கோட்டை: இலங்கையில் இருந்து புதுக்கோட்டைக்கு ரூ.10.03 கோடி மதிப்பிலான 13.9 கிலோ தங்கத்தை கடத்த முயன்ற 5 பேரை வருவாய் புலனாய்வுதுறை அதிகாரிகள் மடக்கி பிடித்து, கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.
இலங்கையில் இருந்து கடலோரப் பகுதி வழியாக தங்கம் கடத்தப்படுவதாக உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி வருவாய் புலனாய்வுதுறை அதிகாரிகள் ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். ராமநாதபுரத்தில், அதிகாரிகள் குழுவின் சோதனையில், ஒருவர் 5892.15 கிராம் (5.8 கிலோ) எடையுள்ள தங்கத்தை 6 பாக்கெட்டுகளில் வைத்து எடுத்துச்சென்றுள்ளார். அவற்றை உடனடியாக பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து மதுரை - சிவகங்கையில் சோதனையிட்ட அதிகாரிகள் குழு, தங்கம் கடத்திச் சென்ற இருவரையும், தங்கத்தைப் பெறவிருந்த 2 பேரையும் மடக்கிப் பிடித்தது. அவர்களிடமிருந்து மொத்தம் 8060.5 கிராம் (8 கிலோ) எடையுள்ள தங்கம் வைக்கப்பட்டிருந்த ஏழு பாக்கெட்களையும் பறிமுதல் செய்தனர். மொத்தம் ரூ.10.03 கோடி மதிப்புள்ள 13.952 கிலோ எடையுள்ள கடத்தல் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
முதற்கட்ட விசாரணையில், கைப்பற்றப்பட்ட தங்கம், இலங்கையில் இருந்து, தமிழகத்திற்கு கொண்டுவரப்பட்டு அங்கிருந்து புதுக்கோட்டை மாவட்டத்திற்கு கடத்த கொண்டுவரப்பட்டது தெரியவந்தது. இது தங்கத்தை கடத்திவந்த 5 பேர்களிடமும் விசாரணை நடந்து வருகிறது.

