UPDATED : அக் 05, 2026 12:00 AM
ADDED : அக் 04, 2026 07:07 PM
பெரம்பலுார்: பெரம்பலுார் அருகே, புதிதாக திறப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கடையில், 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானது.
பெரம்பலுார் மாவட்டம், குரும்பாபாளையத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார், 37, இவர், பெரம்பலுார் – அரியலுார் சாலையில், பேப்பர் டீ கப், ஜூஸ் கப், தட்டு, சில்வர் பேப்பர் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்யும் கடை திறப்பதற்காக கடந்த ஒரு வாரமாக ஏற்பாடு செய்துள்ளார்.
இந்நிலையில், கடையில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீப்பிடித்து, கடை முழுதும் தீப்பற்றி எரிந்தது. கடையின் அருகேயுள்ள துறைமங்கலத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, 46, என்பவரது ரியல் எஸ்டேட் அலுவலகத்தின் மேற்கூரையும் எரிந்து சேதமடைந்தது.
பெரம்பலுார் தீயணைப்புத்துறையினர், ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போராடி தீயை கட்டுப்படுத்தினர். இதில், கடையின் உள்ளே வைத்திருந்த, 3.80 லட்சம் ரூபாய், விற்பனைக்காக இறக்குமதி செய்யப்பட்டிருந்த, 1.20 லட்சம் மதிப்பிலான டீ கப், ஜூஸ் கப், தட்டு, சில்வர் பேப்பர் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து நாசமானது. பெரம்பலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.
