ADDED : ஜன 22, 2025 02:25 AM
சென்னை:புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில், 2022 டிச., 26ல், குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கை, இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக, சி.பி.சி.ஐ.டி., விசாரித்து வருகிறது.
இந்த வழக்கை, சி.பி.ஐ., அல்லது சிறப்பு புலனாய்வு விசாரிக்க வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ராஜ்கமல், மார்க்ஸ் ரவீந்திரன் உள்ளிட்டோர் பொது நல வழக்குகள் தொடர்ந்தனர். அவற்றை விசாரித்த உயர் நீதிமன்றம், மூன்று மாதங்களுக்குள் விசாரணையை முடிக்குமாறு, சி.பி.சி.ஐ.டி.,க்கு உத்தரவிட்டிருந்தது.
பின், இந்த வழக்குகள், நீண்ட நாட்களாக விசாரணைக்கு வரவில்லை.
இந்நிலையில், இந்த பொது நல மனுக்களை விசாரிக்க வேண்டும் என, தலைமை நீதிபதி அமர்வில், நேற்று அரசு பிளீடர் முறையிட்டார். இதை ஏற்று, நாளை வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என, 'முதல் பெஞ்ச்' தெரிவித்துள்ளது.