ஸ்டிரைக்: பஸ் போக்குவரத்து பாதிப்பு இல்லை; பெரும்பாலான பஸ்கள் ஓடுகிறது
ஸ்டிரைக்: பஸ் போக்குவரத்து பாதிப்பு இல்லை; பெரும்பாலான பஸ்கள் ஓடுகிறது
UPDATED : ஜன 10, 2024 03:25 AM
ADDED : ஜன 09, 2024 06:38 AM
சென்னை: தொழிற்சங்கங்கள் ஸ்டிரைக் அறிவித்திருந்தாலும் , தமிழகம் முழுவதும் பெரும்பாலான பஸ்கள் இயங்கியது. முன்பதிவு செய்தவர்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என்றும், பெரும்பாலான பஸ்கள் இயக்கப்பட்டு வருவதாகவும் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார்.
சேலத்தில் 1,063 பஸ்கள் இயங்குகிறது. மயிலாடுதுறையில் 55 பஸ்களில் 44 பஸ்கள் இயங்குகிறது. பெரும்பாலானா மாவட்டங்களில் 80 சதவீதத்திற்கும் மேலான பஸ்கள் இயக்கப்படுகிறது.
தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத நிலையில் இன்று ஜனவரி 09ம் தேதி காலை 6 மணி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக சங்கங்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளன.
இந்நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போலீஸ் பாதுகாப்புடன் தற்காலிக ஊழியர்களைக் கொண்டு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னை, மதுரை கோவை உள்ளிட்ட நகரங்களில் 60 சதவீதத்திற்கும் அதிகமான பஸ்கள் இயங்கி வருகின்றன. கன்னியாகுமரி நாகர்கோவிலில் சில பஸ்கள் போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்பட்டு வருகின்றன.
இருப்பினும் கிராமப்புறங்களில் பஸ்கள் இயக்கப்படாததால் மக்கள் அவதிக்கு ஆளாகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆம்னி பஸ்களை இயக்க தயார்
பெரும்பாலான ஆம்னி பஸ்கள் இரவு நேரங்களில் இயக்கப்படும் நிலையில். அரசு கேட்டுக் கொண்டால் பகல் நேரங்களில் பஸ்களை இயக்க தயார் என்று ஆம்னி பஸ்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்
சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட நகரங்களில் போக்குவரத்து ஊழியர்கள் பணிமனை முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் பல்லவன் சாலை பணிமனையிலும் மதுரையில் பொன்மேனி பணிமனையிலும் போக்குவரத்து ஊழியர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
95.33% பஸ்கள் இயக்கப்படுகின்றன
பஸ் ஸ்டிரைக் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், காலை 11:00 மணி நிலவரப்படி, மொத்தமுள்ள 16,288 பஸ்களில், 15,528 பஸ்கள் இயக்கப்படுவதாகவும்; இது 95.33 சதவீதமாகும் எனவும் சென்னையில், 3,233 பஸ்களில், 3,129 பஸ்கள் இயக்கப்படுவதாகவும் போக்குவரத்துத் துறை தகவல் தெரிவித்து உள்ளது.