திருப்புத்துாரில் அரசு பஸ்கள் மோதல் பிரேக் பெயிலியர் காரணமா; போக்குவரத்து கழக ஊழியர்கள் அதிருப்தி
திருப்புத்துாரில் அரசு பஸ்கள் மோதல் பிரேக் பெயிலியர் காரணமா; போக்குவரத்து கழக ஊழியர்கள் அதிருப்தி
ADDED : டிச 02, 2025 04:16 AM

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் திருப்புத்துார் அருகே அரசு பஸ்கள் மோதிய விபத்தில் 11 பேர் பலியாயினர். இந்த விபத்திற்கு புதியதாக வழங்கப்பட்ட பிஎஸ் 6 ரக பஸ்சில் உள்ள பிரேக் பெயிலியர் தான் காரணம் என போக்குவரத்து கழக ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். இவர்களது புகார் குறித்து அரசு முழுமையாக ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கும்பகோணம் லிமிடெட் காரைக்குடி மண்டலத்தின் கீழ் ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய இரு மாவட்டங்களை உள்ளடக்கி 11 கிளைகள் உள்ளன. இதில் 598 பஸ்கள் இயக்கப்படுகிறது. டிரைவர், கண்டக்டர்கள் பராமரிப்பாளர்கள் அலுவலர்கள் என 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணி செய்து வருகின்றனர். அரசு போக்குவரத்து கழகத்தில் 2018 முதல் 2020 வரை பி.எஸ். 4 இன்ஜின் ரக அரசு பஸ்கள் இயக்கப்பட்டன.
இவற்றை மத்திய அரசு தடை செய்தது. 2024 ஆம் ஆண்டு முதல் குறைந்த மாசு ஏற்படுத்தும் வகையில் வடிவமைப்பு கொண்ட பி.எஸ்., 6 ரக இன்ஜின் பொருத்தப்பட்ட அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது.
காரைக்குடி கோட்டத்தில் 200 பி.எஸ் 6 ரக பஸ்கள் இயக்கப்படுகிறது.
காரைக்குடி கோட்டத்தில் போதிய பணியாளர்கள் நியமிக்கப்படாமல் 40 சதவீதம் வரை காலிப் பணியிடங்கள் உள்ளன. இதனால் தற்காலிக கண்டக்டர், டிரைவர்கள் பணி நியமனம் செய்யப்படுகின்றனர். அவர்களும் குறிப்பிட்ட சிலரின் பரிந்துரை பேரில் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், முறையாக பயிற்சி கொடுக்காமல் பணி நியமனம் செய்யப்பட்டதாக புகார் உள்ளது.
மேலும் புதிய ரக இன்ஜின் பொருத்தப்பட்ட பஸ்களில் பிரேக் பெயிலியர் என்பது தொடர்கதையாக உள்ளது.
இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என பணியாளர்கள் தெரிவிக்கின்றனர். ஒவ்வொரு கிளையிலும் பராமரிப்பு துறையில் 30 பேர் இருக்க வேண்டிய இடத்தில் 8க்கும் குறைவான பணியாளர்களே உள்ளனர்.
அதிகாரிகள் கூறுகையில் பி.எஸ்., 6 பஸ்களில் பிரேக் பெயிலியர் என்ற பிரச்னை ஏதுமில்லை. பொய்யான புகார். வண்டிகள் முறையாக பராமரிப்பு செய்யப்படுகிறது. தற்காலிக பணியாளர்கள் உடனடியாக பணியில் அமர்த்தப்படுவதில்லை. பல்வேறு சோதனைக்கு பிறகே பணியமர்த்தப்படுகின்றனர்.
தனியார் பஸ்களை ஓட்டிய அனுபவம் இருக்க வேண்டும். அதனைத் தொடர்ந்து போக்குவரத்து கழக பயிற்சி மையத்தில் பயிற்சி அளிக்கப்படுகிறது. அங்கு தேர்வானவர்களுக்கு தலைமை போக்குவரத்து கழக மையத்தில் பயிற்சி அளிக்கப்படுகிறது. முழுமையான பயிற்சிக்கு பிறகே தேர்வு செய்யப் படுகின்றனர். காலிப்பணியிடங்களை நிரப்பும் பணி செயல்முறையில் உள்ளது என்றனர்.

