ADDED : பிப் 23, 2024 02:19 AM
சென்னை: பெரிய ஊராட்சிகளை பிரிக்க, குழு அமைக்கப்பட்டு உள்ளதாக, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியசாமி தெரிவித்தார்.
சட்டசபையில் கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:
காங்கிரஸ் - ராமச்சந்திரன்: அறந்தாங்கி தொகுதி, ஏகணிவயலில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிக்கு, சுற்றுச்சுவர் கட்ட வேண்டும். பெரும்பாலான ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் சுற்றுச்சுவர் வசதி இல்லை.
அமைச்சர் பெரியசாமி: அப்பள்ளிக்கு, 16.07 லட்சம் ரூபாய் மதிப்பில், தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், பணி துவக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திற்கு மூன்று ஆண்டுகளில், 15 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுதும், 4,900 பள்ளிகளில், 900 கி.மீ., நீளத்திற்கு சுற்றுச்சுவர் எழுப்ப, 499 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு பணி நடந்து வருகிறது.
ராமச்சந்திரன்: மக்கள் தொகை அதிகம் உள்ள ஊராட்சிகளை பிரிக்க வேண்டும்.
அமைச்சர் பெரியசாமி: முதல்வர் உத்தரவின்படி, ஊராட்சிகளை பிரிக்க, புதிய ஒன்றியங்கள் ஏற்படுத்த குழு அமைக்கப்பட்டுள்ளது. சில ஊராட்சிகள், பேரூராட்சிகளாக மாற விருப்பம் தெரிவித்துள்ளன. இதுகுறித்து குழு ஆய்வு செய்து, ஊராட்சி ஒப்புதல் பெறப்பட்டு, அதற்கேற்ப நடவடிக்கை எடுக்கப்படும்.
அ.தி.மு.க., - கோவிந்தசாமி: தர்மபுரி மாவட்டம், பால்சிலை கிராமத்தை, வத்தல்மலை ஊராட்சியில் இணைக்க வேண்டும். அனைத்து பள்ளிகளுக்கும், தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் சுற்றுச்சுவர், கழிப்பறை கட்டித் தர வேண்டும்.
அமைச்சர் பெரியசாமி: கழிப்பறை கட்ட, சிறிய பழுதுகளை நீக்க, கடந்த ஆண்டு, 190 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, பணி முடிந்துள்ளது. ஊராட்சியில் சேர்க்க, அந்த கிராம மக்கள் எழுதி கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.