மேய்க்கால் புறம்போக்கு நிலங்களுக்கு பட்டா கட்டுப்பாடுகளை தளர்த்த அரசு பரிசீலனை
மேய்க்கால் புறம்போக்கு நிலங்களுக்கு பட்டா கட்டுப்பாடுகளை தளர்த்த அரசு பரிசீலனை
ADDED : அக் 06, 2025 12:41 AM

சென்னை: தமிழகத்தில் பயன்பாடற்ற மேய்க்கால் புறம்போக்கு நிலங்களுக்கு, பட்டா வழங்குவதற்கான வழிமுறைகளை, அரசு ஆராய்ந்து வருகிறது.
தமிழகத்தில் ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலங்களில் வசிப்போருக்கு, பட்டா வழங்கும் திட்டம், 20 ஆண்டுகளுக்கு மேலாக அமலில் உள்ளது. இத்திட்டத்தில் பட்டா கோரி, பொதுமக்கள் அதிக அளவில் விண்ணப்பிக்கின்றனர்.
இவ்வாறு வரும் விண்ணப்பங்களை, பல்வேறு கட்டங்களில் வருவாய் துறை ஆய்வு செய்கிறது. இதில், அரசின் எதிர்கால பயன்பாட்டுக்கு தேவைப்படாது என்ற நிலையில் உள்ள, குறிப்பிட்ட சில வகை புறம்போக்கு நிலங்களுக்கு இலவச பட்டா வழங்கப்படுகிறது.
இதில், மேய்க்கால் புறம்போக்கு, வண்டிப்பாதை, நீர்நிலை, வாய்க்கால், மயானம் போன்ற சில வகைபாடுகளில் உள்ள நிலங்களுக்கு பட்டா வழங்கக்கூடாது என, கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
இலவச பட்டா வழங்கும் திட்டம் துவங் கி யது முதல், இந்த கட்டுப் பாடு கள் அமலில் உள்ளன.
காரணம் என்ன? ஒவ்வொரு கிராமத்திலும் விவசாய நிலங்களுக்கு இணையாக, கால்நடைகளுக்கான மேய்ச்சலுக்காக நிலங்கள் ஒதுக்கப்பட்டன. இவ்வாறு ஒதுக்கப்பட்ட நிலங்கள், மேய்க்கால் புறம்போக்கு என, வகைப்படுத்தப்பட்டு உள்ளன.
தமிழகத்தில் பெரும்பாலான கிராமங்களில், கால்நடை வளர்ப்பு மக்களின் வாழ்வாதாரமாக இருப்பதால், மேய்க்கால் புறம்போக்கு நிலங்கள் அவசியமாகின்றன.
இதை கருத்தில் வைத்து தான், இலவச பட்டா வழங்கும் திட்டத்தில், மேய்க்கால் புறம்போக்கு நிலங்கள் தவிர்க்கப்பட்டன.
இதுகுறித்து, பொது மக்கள் கூறியதாவது:
தமிழகத்தில் கால்நடை வளர்ப்பு அதிகமாக உள்ள பகுதிகளில், மேய்க்கால் புறம்போக்கு நிலங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில், யாருக்கும் மாற்று கருத்து இல்லை.
அதே நேரத்தில், நகரமயமாதல் அதிகரித்துள்ள பகுதிகளில், கால்நடைகள் வளர்ப்பு இல்லாத இடங்களில், மேய்க்கால் புறம்போக்கு நிலங்களை தொடர்ந்து பராமரிப்பது சாத்தியமில்லை.
விவசாய சாகுபடி நடக்காத விவசாய நிலங்கள், பிற தேவைகளுக்காக வகைப்பாடு மாற்றம் செய்யப்படுகின்றன.
அதேபோன்று, பயன்பாடு இல்லாத மேய்க்கால் புறம்போக்கு நிலங்களை ஆய்வு செய்து, வகைப்பாடு மாற்ற, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து, வருவாய் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தமிழகத்தில் பயன்பாடு இல்லாத மேய்க்கால் புறம்போக்கு நிலங்களை கண்டறிந்து, அவற்றை வகைப்பாடு மாற்றம் செய்து, பட்டா வழங்க வேண்டும் என, பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் வந்துள்ளன.
அரசின் திட்டங்களுக்கு கூட, இத்தகைய நிலங்களை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.
கொள்கை முடிவு இந்த அடிப்படையில், சென்னை போன்று நகரமயமாதல் அதிகம் உள்ள பகுதிகளில், பயன்பாடு இல்லாத மேய்க்கால் நிலங்களை வகைப்பாடு மாற்றி, பட்டா கொடுப்பதற்கான வழிமுறைகளை ஆராய, அரசு அறிவுறுத்தி உள்ளது.
வகைப்பாடு மாற்றத்துக்கு என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும்; எந்தெந்த கட்டுப்பாடுகளை தளர்த்துவது என்பது குறித்து ஆராய்ந்து வருகிறோம். இதன் அடிப்படையில், விரைவில் அரசு புதிதாக கொள்கை முடிவு எடுக்க உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.