புதிதாக 8 மணல் குவாரிகள் நவ., 1ல் திறக்க அரசு முடிவு
புதிதாக 8 மணல் குவாரிகள் நவ., 1ல் திறக்க அரசு முடிவு
UPDATED : அக் 28, 2025 05:58 AM
ADDED : அக் 28, 2025 05:55 AM

சென்னை: தமிழகத்தில் ஐந்து மாவட்டங்களில், எட்டு மணல் குவாரிகள் திறக்கப்பட உள்ளன.
தமிழகத்தில், 12 இடங் களில், ஆற்று மணல் குவாரி கள் செயல்பட்டு வந்தன.
குவாரியில் இருந்து, 'யார்டு'க்கு மணல் அள்ளி போடும் ஒப்பந்ததாரர்கள் முறைகேடு செய்வதாக புகார் எழுந்தது. அவர்கள் சட்டவிரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டது தொடர்பாக, அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டது. இதனால், குவாரிகள் மூடப்பட்டன.
இதையடுத்து, 30க்கும் மேற்பட்ட இடங்களில் மணல் குவாரிகள் திறக்க, நீர்வளத்துறை நடவடிக்கை எடுத்தது. சுற்றுச்சூழல் அனுமதி உள்ளிட்ட பணிகள் முடிந்த நிலையில், ஒப்பந்ததாரர்களை தேர்வு செய்வதில் பிரச்னை ஏற்பட்டது.
இதனால், புதிய குவாரிகள் திறப்பு நடவடிக்கை பாதியில் முடங்கியது. இந்நிலையில், ஏற்கனவே, சுற்றுச்சூழல் அனுமதி பெறப்பட்ட எட்டு இடங்களில், புதிதாக மணல் குவாரிகளை திறக்க அரசு முடிவு செய்துள்ளது.
புதுக்கோட்டையில், 3; கடலுாரில், 2; தஞ்சாவூர், நாமக்கல், ராணிப்பேட்டை மாவட்டங்களில் தலா ஒன்று என மொத்தம் எட்டு இடங்களில், மணல் குவாரிகள் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நவ., 1 முதல் மணல் விற்பனை துவங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது குறித்து, அனைத்து எம்.சாண்ட் மற்றும் மணல் லாரி உரிமையாளர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் யுவராஜ் கூறுகையில், ''மணல் குவாரிகள் தொடர்பாக, உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த வழக்கு, கடந்த வாரம் முடிவுக்கு வந்தது.
''இதையடுத்து, புதிய குவாரிகள் திறக்க முறையிட்டோம். அதன் அடிப்படையில், மணல் குவாரிகள் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,'' என்றார்.

