பொங்கல் பரிசு அவகாசம் நீட்டிப்பை அறிவிக்க அரசு துறைகள் அலட்சியம்
பொங்கல் பரிசு அவகாசம் நீட்டிப்பை அறிவிக்க அரசு துறைகள் அலட்சியம்
ADDED : ஜன 20, 2026 03:25 AM

சென்னை: பொங்கல் பரிசு தொகுப்பை வழங்குவதற்கான காலக்கெடுவை நீட்டிப்பது குறித்து, அதிகாரப்பூர்வமாக அறிவிக்க, உணவு மற்றும் கூட்டுறவு துறை அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக புகார் எழுந்துள்ளது.
தமிழக அரசு, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 2.22 கோடி அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு தலா, 3,000 ரூபாய் ரொக்கம், ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, கரும்பு, வேட்டி - சேலை ஆகியவற்றை வழங்கியது. ரொக்க பணம் வழங்க, 6,687.51 கோடி ரூபாயும், வேட்டி - சேலைக்கு, 668 கோடி ரூபாயும், சர்க்கரை, பச்சரிசி, கரும்புக்கு, 249 கோடி ரூபாயும் நிதி ஒதுக்கப்பட்டது.
ரேஷன் கடைகள் வாயிலாக பொங்கல் பரிசு வினியோகம், இம்மாதம், 8ல் துவங்கிய நிலையில், ஜன. 14ம் தேதி வரை வழங்கப்பட்டது. இந்த காலத்தில் மொத்த கார்டுதாரர்களில், 2.15 கோடி பேருக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட்ட நிலையில், 7 லட்சம் பேர் வாங்கவில்லை.
வேலைக்காக சென்னை போன்ற நகரங்களில் வசிப்போர், சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாததால், பொங்கல் பரிசு தொகுப்பு வாங்கவில்லை என, கூறப்படுகிறது. எனவே, பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கான காலநீட்டிப்பு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை, அரசு வெளியிட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, ரேஷன் ஊழியர்கள் கூறியதாவது:
ரேஷன் கடைகளில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடர்பான வழிகாட்டுதலை, உணவுத்துறை வெளியிடுகிறது. ரேஷன் பொருட்கள், பரிசு தொகுப்பு வழங்கும் பணியை, கூட்டுறவு துறை மேற்கொள்கிறது.
எனவே, உணவுத்துறை தான், பொங்கல் பரிசு வழங்குவதற்கான காலக்கெடு நீட்டிப்பு அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட வேண்டும். அதை பின்பற்றி, கூட்டுறவு துறை அறிவிப்பு வெளியிடும். ஆனால், இந்த இரு துறையும் அதிகாப்பூர்வமாக அறிவிக்க அலட்சியம் காட்டுகின்றன.
இதனால், மீதமுள்ள கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதில் சிக்கல் நீடிக்கிறது. எனவே, இனியும் தாமதம் செய்யாமல், காலக்கெடு நீட்டிப்பு குறித்த அறிவிப்பை, அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

